காவேரி கூக்குரல் சார்பில் கள்ளக்குறிச்சியில் மரப் பயிர் கருத்தரங்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றனர்

Isha

காவேரி கூக்குரல் சார்பில் கள்ளக்குறிச்சியில் மரப் பயிர் கருத்தரங்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றனர்

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மரம்சார்ந்த விவசாயத்தின் மூலம் லட்சங்களில் லாபம் எடுப்பது குறித்த கருத்தரங்கு கள்ளக்குறிச்சியில் இன்று (ஆக.27) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதன்மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயன்பெற்றனர்.

புது விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயம் குறித்த நேரடி அனுபவத்தை பெறும் விதமாக இக்கருத்தரங்கு எடுத்தவாய் நத்தத்தில் உள்ள முன்னோடி விவசாயி திரு. பெரியண்ணன் அவர்களின் மரப்பண்ணையில் நடத்தப்பட்டது. இதில் முன்னோடி மர விவசாயிகளும், வல்லுனர்களும் பங்கேற்று மரப் பயிர் விவசாயத்தை லாபகரமாக செய்வதற்கு தேவையான தொழில்நுட்ப விஷயங்களை மற்ற விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்தனர்.

குறிப்பாக, மகத்தான வருமானம் தரும் மகோகனி மரங்கள் என்ற தலைப்பில் திரு. பெரியண்ணன் அவர்களும், தேக்கு வளர்த்தால் தேவைக்கு பணம் கிடைக்கும் என்ற தலைப்பில் திரு. வெங்கடேசன் அவர்களும், பல அடுக்கு பல பயிர் விவசாயம் என்ற தலைப்பில்  திரு. மகேந்திரன் பாண்டியன் அவர்களும் ஆலோசனைகள் வழங்கினர். மேலும், மரங்களுக்கு இடையே ஊடுப்பயிர் மூலம் வருமானம் எடுக்கும் வகையில், கருப்பிலை சாகுபடி குறித்து திரு. குமார் அவர்களும், கரும்பு சாகுபடி குறித்து திரு. குமாரவேல் அவர்களும் பேசினர்.

இதுதவிர, மரம்சார்ந்த விவசாயத்தின் அடிப்படை அம்சங்களான மண் மற்றும் நீரின் தன்மை, மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வது, மரம் நடும் வழிமுறைகள், மர விவசாய மாதிரிகள், ஊடுப்பயிர் சாகுபடி, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, கவாத்து மற்றும் பராமரிப்பு நுட்பங்கள் என பல தரப்பட்ட விஷயங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மரம் நடுவது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

இதில் பங்கேற்ற விவசாயிகள் பலர் தங்கள் மாவட்டத்திற்கு அருகிலேயே இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர். 

கருத்தரங்கு மற்றும் பயிற்சி வகுப்புகள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு தேவையான டிம்பர் மரக்கன்றுகளை மிக குறைந்த விலையில் வழங்கும் பணியையும் இவ்வியக்கம் மேற்கொண்டுள்ளது. மேலும், இந்தாண்டு 1.1 கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நடுவதை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் ஈஷா நர்சரிகள் செயல்படுகின்றன. இங்கு 19 வகையான டிம்பர் மரக்கன்றுகள், ஒரு கன்று - ரூ.3 என்ற மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.