மாநகராட்சியுடன் இணைந்த ஊராட்சி பகுதிகளுக்கு கூடுதல் நிதி: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
N.P.Jegan
ஊராட்சியாக இருந்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் குறைதீர்வு
முகாமில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, கடந்த 18 மாதங்களாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்த முகாம்களில்,
பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள்
புதிய குடிநீர் இணைப்பு
பாதாள சாக்கடை
சாலைகள், கால்வாய்கள்
மின்விளக்குகள்
போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருவதாக அவர் கூறினார். மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு நாள் பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்கப்பட்டு வருவதாகவும் விளக்கினார்.
மனுக்களுக்கு தீர்வு
தெற்கு மண்டலத்தில் இதுவரை 685 மனுக்கள் பெறப்பட்டு, 665 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கும் விரைவில் முறைப்படுத்தி தீர்வு காணப்படும் என மேயர் தெரிவித்தார்.
இணைக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள்
இந்த பகுதி, ஊராட்சியிலிருந்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியாக இருப்பதாக குறிப்பிட்ட மேயர், கடந்த காலங்களில் வளர்ச்சி குறைவாக இருந்ததாகவும், தற்போது தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
4 அடி, 5 அடி அகலமுள்ள சிறிய சாலைகள் கூட அமைக்கப்பட்டுள்ளன
மழைநீர் தேங்காத வகையில் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
வடகிழக்கு பருவமழை காலத்திலும் எங்கும் மழைநீர் தேங்கவில்லை
புதிய கழிவுநீர் கால்வாய் மற்றும் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது
என்று மேயர் விளக்கினார். வருங்காலங்களில் கனமழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குடிநீர், மின்விளக்கு பணிகள்
தெற்கு மண்டலத்தில் உள்ள 5 வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
திருச்செந்தூர் சாலையில் சில பகுதிகளில் தெரு மின்விளக்குகள் எரியாமல் இருப்பதற்கு, கனரக வாகனங்கள் மின்கம்பங்களை சேதப்படுத்துவதே காரணம் என்றும், தற்போது 15 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் அவை படிப்படியாக சரி செய்யப்படும் என்றும் மேயர் கூறினார்.
மேலும், இந்த பகுதியில் நான்கு முக்கிய இடங்களில் உயர்மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
சாலைகள், மழைநீர் மேலாண்மை
15 வார்டுகள் அடங்கிய தெற்கு மண்டலத்தில் பெரும்பாலான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்ட சாலைகள் இருந்தால் பொதுமக்கள் மனுக்கள் அளித்தால் அவற்றுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் உறுதி அளித்தார்.
கடந்த மழைக்காலத்தில் கோரம்பள்ளத்தில் இருந்து உப்பாத்து ஓடை 12 கி.மீ தூரம் முறைப்படுத்தப்பட்டதன் மூலம், தேவையற்ற மழைநீர் கடலுக்கு சென்று பாதிப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி தெரிவித்த மேயர்
குறைந்த காலத்திற்குள் வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக நிறைவேற்ற உதவிய மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்களுக்கும் மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தெரிவித்தார். அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமின்றி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணக்குமார், நகர அமைப்பு திட்ட பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர் காந்திமதி, உதவி ஆணையர் முனீர் அகமது, நகர்நல அலுவலர் சரோஜா, மாநகராட்சி பொறியாளர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், பகுதி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
nadunilai.com