தூத்துக்குடி - சென்னை இடையே கூடுதல் ரயில், வந்தேபாரத் ரயில் கோரிக்கை
Train
தூத்துக்குடி – சென்னை இடையே கூடுதல் இரவு நேர தினசரி ரயில் மற்றும் வந்தே பாரத் அதிவேக ரயிலை இயக்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத்தின் துணைத்தலைவர் எஸ்.அந்தோணிமுத்துராஜா, மா.பிரம்ம நாயகம், பொருளாளர் வே.லட்சுமணன், உறுப்பினர் இரா.ராதாமோகன் ஆகியோர் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
22,.12.2025 அன்று தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகளை ஆய்வு செய்ய கோட்ட மேலாளர் வந்திருந்தபோது, பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் இந்த மனு வழங்கப்பட்டது.
மனுவில்,
கடந்த 145 ஆண்டுகளாக தூத்துக்குடி – சென்னை மற்றும் சென்னை – தூத்துக்குடி இடையே முத்துநகர் அதிவிரைவு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் எப்போதும் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருப்பதுடன், ஆர்.ஏ.சி பயணிகளுக்கு முழு பயணத்திலும் படுக்கை வசதி உறுதி செய்யப்படாத நிலை தொடர்கிறது.
இதனால், அலுவலகம், தேர்வு, மருத்துவம், வியாபாரம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக சென்னைக்கு பயணம் செய்யும் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையை மாற்ற, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதல் இரவு நேர தினசரி ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.
வந்தே பாரத் ரயில் கோரிக்கை :
தூத்துக்குடி துறைமுகம், தொழில்துறை வளர்ச்சி மற்றும் வேகமான பயண தேவையை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி – சென்னை இடையே வந்தே பாரத் அதிவேக ரயில் இயக்கப்பட வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் கோரிக்கைகள் :
வண்டி எண். 16765–16766 தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்.
வண்டி எண். 22101–22102 மதுரை – லோக் மான்யா திலக் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.
தூத்துக்குடி – திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி ரயில் இயக்க வேண்டும்.
தூத்துக்குடி ரயில் நிலையம் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால் கூடுதல் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்.
வண்டி எண். 16791–16792 பாலருவி விரைவு ரயிலில் ஒரு மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்க வேண்டும்.
திருச்சி – காரைக்குடி – விருதுநகர் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்
நடவடிக்கை எடுப்பதாக உறுதி
மனுவை பெற்றுக்கொண்ட மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக பயணிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்தனர்.
nadunilai.com