தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி 3 நாளில் படுகொலை.!

Murder

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி 3 நாளில் படுகொலை.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லாரி லோடுமென் வசந்தகுமார். இவரது மனைவி சுமதி.இவர் தூத்துக்குடி ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் மாரிச்செல்வம். இவர் சிப்பிங் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர்களது குடும்பத்தினர் தூத்துக்குடி முருகேசன்நகரில் வாடகைவீட்டில் குடியிருந்து வருகின்றனர். தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த பால்வியாபாரி முத்துராமலிங்கம் என்பவரது மகள் கார்த்திகா(21). மாரிச்செல்வமும், கார்த்திகாவும் காதலித்து வந்தனர். கடந்த 30ம் தேதி கோவில்பட்டி காவல்நிலையத்தில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

ஒரே சமூகமாக இருந்தாலும் காதல் திருமணம் செய்து கொண்டதால் கார்த்திகா வீட்டில் எதிர்ப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று(02.11.2023) மாலை புதுமணத் தம்பதி முருகேசன் நகருக்கு வந்திருக்கின்றனர். அதனை எதிர்பார்த்திருந்ததுபோல் அங்கு பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மாரிச்செல்வத்தையும், கார்த்திகாவையும் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டது. 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட எஸ்.பி பாலாஜிசரவணன், தூத்துக்குடி நகர், புறநகர் டிஎஸ்பிக்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் விசாரித்து வருகின்றனர்.  கொலைக்கான காரணமும், கொலை செய்தவர்கள் யார் யார் என்பது குறித்தும் தகவல் தற்போது வரை தெரியவில்லை. கார்த்திகாவின் உறவினர்கள் கொலை செய்தனரா? வேறு யாரும் இதில் ஈடுபட்டனரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.