சுப நிகழ்ச்சிகளில் மீதமான உணவை வீணாக்க வேண்டாம் – பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது
function foods
திருமணம், பிறந்தநாள், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் பெருமளவில் தயாரிக்கப்படும் உணவுகள் பல நேரங்களில் மீதமாகி குப்பையில் கொட்டப்படும் நிலை இருந்து வருகிறது. இதனால் உணவு வீணாவதோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் நோக்கில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) “உணவை சேமியுங்கள்; உணவை பகிர்ந்தளியுங்கள்” (Save Food, Share Food) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இணையதளத்தில் பெறுநர் பட்டியல்
இந்தத் திட்டத்தின் கீழ், திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் மீதமாகும் சாப்பாட்டை பசியால் தவிக்கும் நபர்கள், தங்கும் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் போன்ற அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான பெறுநர் அமைப்புகளின் பட்டியல் மற்றும் தொடர்பு விவரங்கள் https://sharefood.eatrightindia.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது சென்னை, சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கான பட்டியல் பதிவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொபைல் எண் வெளியீடு
இந்நிலையில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை, மீதமான தரமான உணவை எளிதில் வழங்குவதற்காக தனி மொபைல் எண் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுப நிகழ்ச்சிகளில் உணவு மீதமாக இருந்தால், 99627 90877 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். தகவல் அளித்தவுடன், அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்ட தொண்டு அமைப்புகள் அல்லது குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கே வந்து, உணவை பெற்றுச் செல்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான உணவு அவசியம்
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், பகிரப்படும் உணவு புதியதும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். பழுதடைந்த, கெட்டுப்போன அல்லது நீண்ட நேரம் வெளியில் வைக்கப்பட்ட உணவுகளை வழங்கக்கூடாது. உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
உணவு வீணாவதை தடுக்கும் முயற்சி
இந்த முயற்சி மூலம்,உணவு வீணாவதை குறைப்பது பசியால் தவிக்கும் மக்களுக்கு உதவுவது சமூக பொறுப்புணர்வை வளர்த்தல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக விழிப்புணர்வுடன் பொதுமக்கள் ஒத்துழைத்தால், “ஒரு தட்டில் மீதமான உணவு, மற்றொருவரின் ஒரு நாளைய பசியை தீர்க்கும்” என்ற இலக்கை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
nadunilai.com