தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ்ஸ்டாண்டில் 37 புதிய சிசிடிவி கேமராக்கள் - மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்தார்
Tuty Police
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பாக புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் பி.ஏ சிஸ்டம் அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் அண்ணா பேருந்து நிலையம் என்று அழைக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி பேருந்துநிலையமாக்கப்பட்டு இயங்கி வருகிறது. தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும் காவல்துறை சார்பாபில் புதிதாக சிசிடிவி கேமராக்கள் மற்றும் பேருந்து நிலையத்தின் உள் மற்றும் வெளிப்புறத்தில்பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிஏ சிஸ்டம் எனப்படும் ஒலிபெருக்கி அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது.
அதன்படி பேருந்து நிலைய வளாகத்திற்குள் பயணிகள் காத்திருக்கும் பகுதி பேருந்தில் ஏறும், இறங்கும் பகுதி உள்பட அனைத்து பகுதிகளையும் முழுமையாக கண்காணிக்கும் வகையில் மொத்தம் 37 புதிய சிசிடி கேமராக்களும், உயர்திறன் கொண்ட ஆம்பிளிஃபையர் மற்றும் 8 ஹாரன் ஸ்பீக்கர்களும், மேலும் பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்தில் ஷேர் ஆட்டோ நிறுத்தம் முதல் கண்ணா சில்க்ஸ் வரை பி ஏ சிஸ்டம் அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் பி ஏ சிஸ்டம் அமைப்பை தூத்துக்குடி ஒருங்கிணைந்த நவீன சிசிடிவி காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசார் நேரடியாக கண்காணித்தும், தொடர்பு கொள்ளவும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இன்று துவக்கி வைத்தார்.
அப்போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மற்றும் மேற்படி அமைப்பை உருவாக்க உதவிய சிக்னல் கோர் சொல்யூசன்ஸ் (Core Techno Solutions)மற்றும் தூத்துக்குடி TMB வங்கி அதிகாரி ஆகியோர் உடனிருந்தனர்.
வேலை நிம்மித்தமாக தினசரி பேருந்துநிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் சிலர் கூறும்போது, மாவட்ட காவல்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்க தக்கது. அதேவேளை, பேருந்துநிலையத்தில் 24 மணி நேரமும் காவலர்கள் இருக்கும்படி செய்ய வேண்டும். தனிமனித சுதந்திரம் என்கிற பெயரில் அடுத்தவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் காதல் ஜோடிகள் செய்யும் சேட்டைகள் விரும்பதகாததாக உள்ளது. மதுபோதையில் உலாவருவோரால் பயணிகளுக்கு கடும் தொல்லை இருக்கிறது. குடிபோதையில் சேட்டை செய்வோர் குறித்து தகவல் தெரிவிக்க யாருக்கும் தைரியம் இல்லை. தற்போது வைக்கப்பட்டுள்ள கேமராவில் பேருந்து நிலையம் முழுவதும் கவர் ஆகுமா என்று தெரியவில்லை. அவ்வாறு கவர் ஆனால் அத்தனை சேட்டைகளும் அதில் தெரிய வரும். பேருந்து நிலையத்தில் உள் பகுதியில் காதலர்கள் செய்யும் சேட்டைகள் கவர் ஆகாத பட்சத்தில் போலீசார் பேருந்து நிலையம் முழுவதும் ரோந்து பணியில் இருந்து கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
nadunilai.com