தமிழக முதல்வரானதும் ஜோசப் விஜய் போட்ட 3 கையெழுத்து

C.M.Vijay

தமிழக முதல்வரானதும் ஜோசப் விஜய் போட்ட 3 கையெழுத்து

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் அவருக்கு பதவி மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் விஜயுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது அமைச்சர்களும் அமைச்சராக பொறுப்பேற்றனர்.

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படும் இந்த பதவியேற்பு விழாவில் ராகுல்காந்தி, தமிழிசைசெளந்திரராஜன், நயினார்நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் முதலமைச்சர் விஜய் தனது முதல் நாள் அலுவல் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கி, மக்கள் நலனை மையப்படுத்திய மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

மக்களின் அத்தியாவசிய செலவுகளை குறைக்கும் நோக்கில், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் ஒப்புதல் வழங்கினார்.

இந்த திட்டத்தின் மூலம் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மின்சார கட்டண சுமை குறையும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மின்சார சலுகைகளுடன் இணைந்து இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் “சிங்கப்பெண்” என்ற பெயரில் மாநில அளவிலான சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கவும், இரவு நேர கண்காணிப்பை அதிகரிக்கவும், அவசர அழைப்புகளுக்கு உடனடி பதில் வழங்கவும் இந்தப் படை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முதல் கட்டமாக இந்தப் படை பணியில் ஈடுபடுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார்.

இதற்காக தனிப்பட்ட கண்காணிப்பு பிரிவு அமைத்து, பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்படும் என்றும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள், பெற்றோர்களுக்கான ஆலோசனை மையங்கள் மற்றும் மறுவாழ்வு திட்டங்களும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே மக்கள் நலன், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு போன்ற முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அரசு தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறது என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.