தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.517 கோடி மதிப்பிலான பணிகள் - புதிய டெண்டர் வெளியிடு
Tuty Port
தமிழகத்தின் முக்கிய ஏற்றுமதி - இறக்குமதி மையங்களில் ஒன்றாக திகழும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தற்போது மிகப்பெரிய விரிவாக்க கட்டத்தை நோக்கி நகர்கிறது. துறைமுகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.517 கோடி மதிப்பிலான பணிகளுக்காக புதிய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாக துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை துறைமுகத்துக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறும் தூத்துக்குடி துறைமுகம், தென் தமிழகத்தின் தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இத்துறைமுகம் வழியாக பெட்ரோலியம் பொருட்கள், எல்.பி.ஜி. எரிவாயு, நிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதேபோல் சர்க்கரை, உப்பு, சிமென்ட், கன்டெய்னர் சரக்குகள் மற்றும் பல்வேறு தொழில்துறை பொருட்கள் கையாளப்படுகின்றன.
கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற தேசிய கடல்சார் மாநாட்டில், இந்திய துறைமுகங்களை உலக தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்காக மட்டும் 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக தற்போது துறைமுகத்தில் உள்ள 20 கப்பல் நிறுத்துமிடங்களை நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ரூ.517 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம் கூடுதல் கப்பல் நிறுத்த தளங்கள், மேம்பட்ட கன்டெய்னர் வசதிகள் மற்றும் அதிவேக சரக்கு கையாளும் உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆண்டுக்கு கூடுதலாக 4 லட்சத்து 20 ஆயிரம் கன்டெய்னர் பெட்டகங்களை கையாளும் திறன் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது ஆண்டுக்கு சுமார் 16 லட்சம் அளவில் உள்ள கன்டெய்னர் கையாளும் திறன், 20 லட்சமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது ஆண்டுக்கு 81.5 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட தூத்துக்குடி துறைமுகத்தை, 2030ஆம் ஆண்டுக்குள் 160 மில்லியன் டன் சரக்குகள் வரை கையாளக்கூடிய அளவிற்கு விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டால் தென் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரிப்பதுடன், ஏற்றுமதி நிறுவனங்கள், லாஜிஸ்டிக்ஸ் துறை மற்றும் வேலைவாய்ப்புகளும் பெருமளவில் உயரும் என தொழில் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்ட தொழில்துறைக்கு இது பெரிய ஊக்கமாக அமையும் என்று கூறப்படுகிறது.
nadunilai.com