நீதிமன்றங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - வரவேற்க வேண்டிய நடவடிக்கை
Police News
எங்கே போனாலும் இங்கே வந்துதானே ஆகனும் என முக்கிய இடம் குறித்து பேசும்போது சொல்வார்கள். அப்படிதான் இருந்து வருகிறது நீதிமன்ற பகுதிகளும். மிக சிறிய தவறுகள் முதல், மிகப்பெரிய தவறுகள் வரை மட்டுமில்லாமல், பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வை ஏற்படுத்தி தரும் இடம் இந்த நீதிமன்றங்கள். எதோ ஒரு வகையில் எதையாவது எதிர்பார்க்கிற அனைவருமே நீதிமன்றம் சென்றுதான் ஆகவேண்டும். அதிலும் தவறு செய்து சிக்கி கொண்டவர்கள், தவறு செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்தவர்கள் என்று எல்லாருமே இங்கே வந்துதான் ஆகவேண்டும். அப்படி வந்து செல்வோரின் பாதுகாப்பு கேள்விகுறியாக இருந்து வந்த நிலையில்தான் துப்பாக்கியேந்திய போலீஸ் காவல் கட்டாயம் என்று உத்தரவு போட்டிருக்கிறார் தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நெல்லை நீதிமன்றம் அருகில் வழக்கு விசாரணைக்காக வந்த மாயாண்டி என்பவரை ஏழு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது. பொதுமக்கள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர் என பலரும் அங்கு நின்ற போதிலும் அந்த கொலையை தடுக்க முடியவில்லை. கொலையாளிகளில் ஒருவரை மட்டும் வக்கீலும்,காவல்துறையை சேர்ந்தவரும் சேர்ந்து பிடித்தனர். இந்த விவகாரம் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றம் முன்பு நடந்த சம்பவத்தையே தடுக்க முடியாமல் போனபோது பொதுமக்களை எப்படி காப்பாற்ற போகிறார்கள் என்கிற சாமான்ய மக்களின் கேள்வி, உச்ச பதவியில் இருக்கும் அனைவரையும் உலுக்கியது. வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு வந்துதான் ஆகவேண்டும் என்கிறபோது, எதிரிகளால் தாக்கப்படலாம் என்கிற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையேற்று தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால், மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் கமிஷனர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், நெல்லையில் மாவட்ட நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவத்தை கருத்தில் கொண்டு, இடைக்கால நடவடிக்கையாக, அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும். ஒரு எஸ்.ஐ.., தலைமையில், இரண்டுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு குழுவை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும். நீதிமன்றங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். அங்கு பணியில் உள்ள, எஸ்.ஐ.,க்கள், கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு குழுவில் ஒரு காவலர், வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட, லாங் ரேஞ்ச் வெப்பன் எனப்படும், நீண்ட தூரத்தில் இருந்து சுடும் துப்பாக்கியை வைத்திருக்க வேண்டும். இவர்கள், சட்ட ரீதியாக தங்களிப் உடல் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தால், காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தலாம்.
நீதிமன்றங்களில் பாதுக்காப்பு பணியில் அமர்த்தப்பட்ட போலீசாருக்கு, வழங்குகளின் விபரம், பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் குறித்து, கட்டாயம் தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும், யார் யார் மீதான வழக்குகள் நடக்கின்றன. அவர்கள் எப்போது நீதிமன்றங்களுக்கு ஆஜராக வருகின்றனர். அவர்களில் பழிக்கு பழி வாங்க துடிக்கும் நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இது வரவேற்க தக்கது. அதேவேளை, இந்த உத்தரவானது இடைக்கால நடவடிக்கை என்று குறிப்பிட்டிருப்பதில் மாற்றம் செய்து, தொடர்ந்து நீதிமன்றங்களில் இதுபோன்ற துப்பாக்கி ஏந்திய போலீஸ் நிறுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க இது பெரிதும் உதவும். இதற்கிடையே டிஜிபியின் உத்தரவையேற்று உடனே நீதிமன்றங்கள் முன்பு துப்பாக்கியேந்திய போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.