ஈஷா அறக்கட்டளை – தொண்டாமுத்தூர் வட்டார மக்களுக்கு இலவச தகன சேவை

isha news

ஈஷா அறக்கட்டளை – தொண்டாமுத்தூர் வட்டார மக்களுக்கு இலவச தகன சேவை

கோவை:மாசி-9(21.02.2026)

ஈஷா அறக்கட்டளை மற்றும் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி இணைந்து செயல்படுத்தும் நவீன எரிவாயு மயானத்தில், தொண்டாமுத்தூர் வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் ‘இலவச தகன சேவை’ அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

மக்கள் கோரிக்கைக்கு இணங்க நடவடிக்கை

தொண்டாமுத்தூர் அருகிலுள்ள ஈஷா யோக மையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 5-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு அருகில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மயானம் அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, பஞ்சாயத்து அனுமதியுடன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, நவீன எரிவாயு அடிப்படையிலான மயானம் நிறுவப்பட்டது.

முழுமையான வசதிகளுடன் செயல்பாடு

தற்போது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த மயானத்தில், நவீன எரிவாயு தகன அமைப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், முறையான நடைபாதைகள், பசுமை சூழல் மற்றும் மரநடுகை, காத்திருப்பு கூடங்கள் போன்ற அடிப்படை மற்றும் மேம்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச தகன சேவை – அனைவருக்கும் பயன்பாடு

இந்த சேவையின் மூலம் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வசிக்கும் அனைத்து சமூக மக்களும் எந்தவித கட்டணமும் இன்றி தங்கள் உறவினர்களின் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள முடியும். பொருளாதார சுமையை குறைப்பதோடு, கண்ணியமான இறுதி மரியாதை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகக் கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் பராமரிப்பு

சத்குருவின் வழிகாட்டுதலின் பேரில், 2010ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மயானங்களை பராமரித்து வரும் ஈஷா அறக்கட்டளை, தற்போது சென்னை பெசன்ட் நகர், கோவை, நெய்வேலி, வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 30 மயானங்களை இயக்கி பராமரித்து வருகிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு உதவி

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது. தொண்டாமுத்தூர் வட்டார மக்களுக்கு அருகிலேயே, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் முழுமையான வசதிகளுடன் கூடிய இலவச தகன சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது கிராமப்புற மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.