தனியார் பங்கேற்புடன் திருவண்ணாமலை,திருச்சி,ஓசூர், நாமக்கல், ஈரோட்டில் புதிய பஸ் நிலையங்கள்
New Bus Stand

திருச்சி, ஈரோடு உள்ளிட்ட ஜந்து நகரங்களில் தனியார் பங்களிப்புடன் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கும்பணிகளை, தமிழக நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் துவக்க உள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போக்குவரத்து நெரிசல்காரணமாக, பஸ் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நெருக்கடி ஏற்படுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகரித்துள்ள நிலையில். பஸ் நிலையங்களை மேம்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதனால்,ஒவ்வொரு நகரத்திலும், ஏற்கனவே இருக்கும் பஸ் நிலையத்தை ஒட்டி நிலம் இருந்தால், அதை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டது. கூடுதல் நிலம் இல்லாத ஊர்களில் வேறு பகுதிகளில் நிலம் தேர்வு செய்து புதிய பஸ்நிலையங்களில்கட்டப்படுகின்றன. சென்னை, மதுரை, நெல்லை, சேலம் நகரங்களுக்கு அடுத்தபடியாக மேலும் சில நகரங்களில் பஸ் நிலைய மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
இதற்கான பொறுப்பு தமிழக நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து ஓசூர், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி, ஈரோடு நகரங்களில் புதிய பஸ் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன. அரசு நிதியதவி உள்ள போதிலும் இதற்கான பணிகள் தனியார் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட உள்ளன.
நிலம் தேர்வு பணிகள் முடிந்துள்ள நிலையில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க கலந்தாலோசனை நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.