கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு விவகாரம் : தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் - இது மட்டுமே தீர்வாகாது
kallakuruchi

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு இந்த நிவாரணம் மட்டுமே சரியான தீர்வாக இருக்க முடியாது என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நிரந்தர திட்டம் தீட்டப்பட வேண்டும். மதுவிலக்கு கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்க தக்கது. அதேவேளை அரசே மதுவை விற்பது மது பிரியர்களை அதிகப்படுத்தும், அந்த சூழ்நிலையில் மதுவிற்பனையை தடுத்தாலோ, மதுவை கிடைக்காமல் செய்தாலோ இதுபோன்ற கள்ளத்தனமாக உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிலை ஏற்படும். எனவே மது விலக்கு கொள்கை என்பது, டாஸ்மாக் விற்பனையை படிப்படியாக குறைத்து மக்கள் மதுவை தேடி செல்லாமல், மக்கள் மதுவை மறக்கும் அளவிற்கு மாற்றுவதே சரியான தீர்வாக இருக்க முடியும். மக்கள் குடிப்பதற்கு மதுக்கடைகளை ஒரு புறம் அரசே திறந்து வைத்துக் கொண்டு, இன்னொருபுறம் மதுவிலக்கு என்கிற பெயரில் நிர்வாகம் செய்வது நியாயம் கிடையாது. மதுவிலக்கு கொள்கையில் சரியாக இருப்பதாக இருந்தால் பூரண மது விலக்கு வேண்டும். அதை உடனே அமல்படுத்த முடியாத சூழல் இருக்கிறது என்றால் படிப்படியாக மது விற்பனையை குறைத்து மதுவை முழுவதுமாக தடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் இதுபோன்ற சிக்கலில் சிக்க மாட்டார்கள்.
ஆனால் சிலர், மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று கருத்து சொல்வார்கள். ஆமாம், நேர்வழியில் கிடைக்காவிட்டால் குறுக்குவழியில் பெறுவதற்கு முயற்சி செய்யத்தான் செய்வார்கள். அப்படி எத்தனைபேர் குறுக்கு வழியை நாடுவார்கள்?. குறிப்பிட்ட அளவிற்கு குடி சேதாரம் குறையும்தானே?. மேலும் அப்படி குறுக்கு வழியில் செல்வோரை தடுக்கும் பொறுப்பு, கிடைக்காமல் செய்யும் பொறுப்பு அரசுக்குத்தானே இருக்கிறது. அரசிடம்தானே சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் உரிமை, கடமை இருக்கிறது. காவல்துறையை பலப்படுத்தி சரியானபடி நடவடிக்கை எடுத்தால் எந்த பிரச்னையும் வராது.
கொரோனா காலத்தில் மது கிடைக்காவிட்டாலும் மக்கள் மனதை தேற்றிக் கொண்டு வாழத்தானே செய்தார்கள், அப்படித்தான் வாழ்வார்கள். அதுதான் மக்களுக்கும், நாட்டிற்கும் தேவை.