கள்ளக்குறிச்சியில் கட்டுக்கடங்காத கள்ளச்சாராயம் - தடுக்கத் தவறிய தமிழக அரசு

kallakurutchi

கள்ளக்குறிச்சியில் கட்டுக்கடங்காத கள்ளச்சாராயம் - தடுக்கத் தவறிய தமிழக அரசு

தமிழகத்தில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதற்கு மது விற்பனையே முக்கிய காரணம் என்று சமூக ஆர்வலர்கள் இடைவிடாது கூறிவருகின்றனர். அவர்களின் வார்த்தைகள் அரசின் காதுகளுக்கு கேட்பதாக தெரியவில்லை. அவ்வப்போது நடக்கும் கள்ளச்சாராய சாவின் போதுதான் விழித்துக் கொண்டவர்களாக செயல்படுகின்றனர். அதுவும் காலப்போக்கில் காணாமல் போய்விடுகிறது. தாராளமாக கிடைக்கும் மதுவினால் சட்டம், ஒழுங்கு கெட்டுப்போய் கிடக்கிறது என்பதை சில சம்பவங்கள் மூலம் பார்க்க முடிகிறது. கள்ளக்குறிச்சி சம்பவமே தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்பதற்கு சாட்சியாகியுள்ளது.  

ஆனால் தமிழகக் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் கள்ளச் சாராயங்களை ஒழிப்பதற்குப் பதிலாக அதை விஷச் சாராயம் என்ற பெயரிலே மூடி மறைக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் தற்போதுவரை கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 -தைக் கடந்து அது மேலும் நீண்டுகொண்டேச் செல்கிறது. 150 க்கும் மேற்பட்டோர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சேலம் மற்றும் விழுப்புரத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற பல மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் தற்போது வரை உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் மருத்துவக் குழுவினரால் அவர்களுக்கானச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுதான் வருகிறது. அவர்களுக்குச் சிகிச்சைகளை அளிப்பதற்காக தமிழகத்திலுள்ள பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். 

இந்த சம்பவத்தில் பாதிகப்பட்ட பலருக்கும் கண் பார்வை பாதிப்பு மற்றும் தீவிர வயிற்று எரிச்சல் போன்ற அறிகுறிகள் அதிகமாகத் தென்பட்டுள்ளது. தமிழக அரசும் இதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின்மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணி மாற்றம் செய்யப்பட்டு வேறொரு மாவட்ட ஆட்சியர் அங்கு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த சில காவல் அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். 

தற்போது இந்த வழக்கு சிபி-சிஐடி துறைக்கு மாற்றப் பட்டிருக்கிறது. ஆனால், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் தலைமையிலான மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஏன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுடன் ஏன் இணைக்கப்பட்டது. அது தனியாகத் தனித்து ஒருவேளை இயங்கப்பட்டிருந்தால் நிச்சயமாக கள்ளச் சாராயங்களின் புழக்கத்தைக் குறைத்திருக்கலாம். தற்போது கூட அந்தத் துறை தனித்து இயங்குவது போல தமிழக அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியான ஒரு சூழலில் அந்த துறையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளின்மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த வருடம் கள்ளச் சாராயத்தால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் மரணம் அடைந்தப் போது காவல்துறையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் துணைக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் துணைக் காவல் ஆய்வாளர்கள் என 6 பேர் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள். 

ஆனால், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு என்று தனியாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் அவர்களின் மீது துறைரீதியான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததே இந்தச் சம்பவத்திற்கு மிக முக்கியக் காரணம். ஒருவேளை அன்றே இவர்களின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப் பட்டிருக்கலாம். அது மட்டுமல்ல மதுவிலக்கு மற்றும் கலால்துறையைச் சேர்ந்த காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளின் மீதும் எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்காதது இதுபோன்ற சம்பவங்களுக்கு மிக முக்கியமான ஒரு காரணம். முன்பெல்லாம், மதுக்கடைகள் அந்த மாவட்டத்தினுடைய மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த கட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால், கள்ளச் சாராயப் புழக்கம் பெருமளவில் தடுக்கப்பட்டது. 

அப்படியே அவர்களை மீறி கள்ளச் சாராயப் புழக்கம் இருந்தாலும்கூட கட்சிக்காரர்களே அவர்களைப் பிடித்துக் காவல்துறையில் ஒப்படைத்து விடுவார்கள். அதற்கானக் காரணம் என்னவென்றால், அவர்களுடைய மதுக்கடை வருமானம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களால் கள்ளச் சாராயப் புழக்கத்தை பெருமளவில் தடுக்க முடிந்தது. ஆனால், செந்தில் பாலாஜி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பதவியேற்றதும் மதுக்கடைகளுக்கான ஒப்பந்தம் கட்சிக்காரர்களுக்குப் பதிலாக வெளி மாவட்டத்தை மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்களுக்கு மதுக்கடைகளுக்கான ஒப்பந்தங்கள் கிடைக்கவில்லை. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மதுக்கடைகளை நடத்தும்போது அவர்களால் அருகில் நடக்கக்கூடிய கள்ளச் சாராயப் புழக்கத்தை எப்படி தடுத்து நிறுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் மதுக்கடைகள் கிடைக்காத விரக்தியில் உள்ள உள்ளூர், கிராம, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாவட்ட அளவிளான கட்சி பிரமுகர்கள் எப்படி கள்ளச் சாராய வியாபாரத்தை அல்லது புழக்கத்தைப் பற்றி காவல்துறை அல்லது ஆட்சியாளர்களுக்கு தகவல்களைத் தருவார்கள். அவர்கள் நடக்கக்கூடிய ஆட்சியின்மீது நிச்சயம் அவப்பெயரை ஏற்படுத்ததான் முயற்சிப்பார்கள். கள்ளச் சாராயத்தைத் தடுக்க வேண்டுமானால், முதலாவதாக மதுவிலக்கு மற்றும் கலால் பிரிவு தன்னிச்சையாகச் செயல்படுவதுடன் மதுவிலக்குக்கு என்று திறமையாகச் செயல்படும் நேர்மையான அதிகாரிகளை உயர்மட்ட அளவில் நியமனம் செய்ய வேண்டும் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு என்று உயர்மட்ட அளவிலான அதிகாரிகளை சரியாக பணிநியமனம் செய்ய வேண்டும். உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பான அதிகாரிகளாக இருந்தால், கீழ்மட்டம் வரை அதிகாரிகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அவர்களை எளிதில் வேலை வாங்குவார்கள் மற்றும் வேலை செய்யாத அதிகாரிகளின் மீது துறைரீதியான நடவடிக்கையை எடுப்பார்கள். 

 இதன்மூலம் கள்ளச் சாராயப் புழக்கத்தையும் எளிதில் கட்டுப்படுத்த முடியும். இரண்டாவதாக, உள்ளூரைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மதுக்கடை ஒப்பந்தங்களை வழங்குவதன் மூலமும் கள்ளச் சாராயப் புழக்கத்தை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும். அதைவிட்டுவிட்டு கள்ளச் சாராயத்தினால் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் என்று அறிவிப்பது அது கள்ளச் சாராய உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுவதற்கு நிச்சயமாக வழிவகுக்கும். நிச்சயமாக, தமிழக அரசு இந்த கள்ளச் சாராய உயிரிழப்புகளைக் கவனத்தில் கொண்டு வருங்காலங்களில் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் மற்றும் தங்களைச் சுயபரிசோதனையும் செய்து கொள்வது மிக முக்கியம்.!

-கோவை வேல்மணி முருகன்