தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் - மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு

Train News

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் - மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு

தூத்துக்குடி - தை 2(ஜன.16)

வர்த்தக நகரமாக விளங்கும் தூத்துக்குடியில், பொதுமக்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இரண்டையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்து மையமாக மேலூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நிறுத்தம் பெற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் சார்பில், மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகன் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை கவனத்தில் எடுத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்யிடம் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில், தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின் மூலம், தினசரி பயணம் செய்யும் பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பெரிதும் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நகரின் போக்குவரத்து நெரிசல் குறையவும், ரயில் பயணம் மேலும் எளிதாகவும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள்நல முடிவை எடுத்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், இதற்கான பரிந்துரையை வழங்கிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்களுக்கும் தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த நடவடிக்கை தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், வர்த்தக மற்றும் போக்குவரத்து முன்னேற்றத்துக்கும் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.