லேட்டாக அறிவிக்கப்பட்ட திருச்செந்தூர் சஷ்டி சிறப்பு ரயில் - பக்தர்கள் அதிருப்தி

Thiruchendur Rail

லேட்டாக அறிவிக்கப்பட்ட திருச்செந்தூர் சஷ்டி சிறப்பு ரயில் - பக்தர்கள் அதிருப்தி

திருச்செந்தூர் முருகன் கோவில் சஷ்டி விழாவிற்குவரும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம் செய்ததை பக்தர்களும், பொதுமக்களும் வரவேற்கின்றனர். அதேவேளை அதற்கான அறிவிப்பு மிகவும் தாமதமாக வெளியானதால் பலர் பயன்படுத்த முடியாமல் போனது என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். 

கடந்த வெள்ளிக்கிழமை (17.11.2023) இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் சென்றது. இதனை ஆவலுடன் எதிர்பார்த்த பக்தர்கள் வரவேற்று பயன்படுத்தினர். அதே வேளையில் பலரும் பயன்படுத்த முடியாமல் போனது என்கிறார்கள். சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு 17ம் தேதி அன்று காலையில்தான் வெளியானது. அதுவரை சிறப்பு ரயில் குறித்த தகவல் எதுவும் இல்லை என்பதால் திருச்செந்தூர் சஷ்டிக்கு செல்லும் பக்தர்கள் வேறு வழியை பின்பற்ற துவங்கினர். அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதி செய்தனர். வாடகை வேன், கார்களை ஏற்பாடு செய்தனர். கடைசி நேரத்தில் பேருந்துகளில் முண்டியடிக்க வேண்டியது வரும் என்று கருதி முன்னதாகவே பஸ்களில் கிளம்பினர். 

நான்கைந்து நாட்களுக்கு முன்னரே சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தால் பக்தர்கள் ரயிலை நம்பியிருப்பர். இப்போது ஏதேதோ வாகனங்களில் திருச்செந்தூர் கிளம்பும் சூழ்நிலை ஏற்பட்டது. இனிவரும் காலங்களிலாவது இது குறித்த அறிவிப்புகளை குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னரே வெளியிட வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.  

மேலும் திருச்செந்தூர் முருகன் கோவில் திருவிழா, குலசை முத்தாரம்மன் கோவில் விழாக்காலங்களில் கூடுதல் சிறப்பு இரயில்களை இயக்கவேண்டும். அவைகள் திருச்செந்தூர் - திருநெல்வேலி மார்க்கத்தில் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று சென்றால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது குரும்பூர், ஆழ்வார்திருநகரி போன்ற ஸ்டேஷன்கள் புறக்கணிக்கப்படுகிறது. இது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை முன்னதாகவே தெரிவிக்கவேண்டும். திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே அனைத்து ஸ்டேன்களிலும் அவைகள் நின்று செல்ல வேண்டும் என்பதை ரயில்வே நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது மற்றும் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட தேவைகளின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நிரந்தரமாகவே கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். 2027க்குள் 3000 புதிய இரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள இந்த வேளையில், இதுபோன்ற தென் மாநில மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதுபோல் அடிக்கல் நாட்டி உள்ள திருச்செந்தூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று இந்த பகுதி வியாபாரிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.