வெள்ளையன் மறைவிற்காக தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு

Vellaiyan

வெள்ளையன் மறைவிற்காக தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன்(76). உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். 

அவரது உடல், சென்னை பெரம்பூர் நெல்வயல் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. வெள்ளையன் உடலுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெள்ளையன் உடல் பெரம்பூர் பாரதி சாலையில் உள்ள வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணி வரை வைக்கப்பட்டிருந்தது. அங்கு அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.க்கள் ஆ.டி.சேகர், தாயகம் கவி, சபாநாயகர் அப்பாவு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாதவரம் மூர்த்தி,பாலகங்கா,ஆர்.எஸ்.ராஜேஷ், வெங்கடேஷ்பாபு,பலராமன்,விருகைரவி மற்றும் இலக்கிய அணி துணைச்செயலாளர் இ.சி.சேகர்,கோகுல இந்திரா, பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன், பாமக வழக்கறிஞர் பாலு, அமமுக செந்தமிழன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா, சமக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன்,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் புஸ்சி ஆனந்த், ஆம் ஆத்மி கட்சி வசீகரன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வணிகர் சங்கத்தினர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து வெள்ளையன் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சிவிளை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று(12.09.2024)மாலை அடக்கம் செய்யப்படுகிறது.    

இந்தநிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. குறிப்பாக மாநகர் பகுதியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் உள்ளது. வெள்ளையன் இறுதி சடங்குகள் முடிந்த பிறகு திறப்பார்கள் என்று தெரிகிறது.