புதுக்கோட்டை அருகே முன்னால் சென்ற பஸ் மீது பைக் மோதிய விபத்தில் நீதிமன்ற காவலாளி பலி
Accident

புதுக்கோட்டை அருகே முன்னால் சென்ற பஸ் மீது பைக் மோதிய விபத்தில் நீதிமன்ற காவலாளி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள கீழ செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் நெல்லையப்பன் (26). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை நெல்லையப்பன் அவரது நண்பரான தூத்துக்குடி கதிர்வேல் நகர் நடராஜன் மகன் வெள்ளைச்சாமி (35) என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். மறவன் மடம் பகுதி நான்கு வழிச்சாலையில் முன்னால் சென்ற பஸ் மீது எதிர்பாராத விதமாக பைக் உரசி உள்ளது. இதில் பைக் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் நெல்லையப்பன் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வெள்ளைச்சாமி படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் விரைந்து வந்து வெள்ளைச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லையப்பன் உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.