தொழிற்சங்க தடையை மீறி தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயங்குகிறது
Tnstc news
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த நிர்வாகத்தில் ஓட்டுநர்,நடத்துனர் உள்பட தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் என்று ஏராளமானோர் அங்கம் வகிக்கின்றனர். அரசு போக்குவரத்து கழகம் என்பது சேவைக்கானதுதான் என்றாலும், அதில் இருந்து வருமானம் வருவதைவைத்துதான் தொழிலாளர்கள், அதிகாரிகளின் ஊதியம் நிர்வகிக்கப்படுகிறது.
இந்தநிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை பொருத்தவரை கடந்த பல ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. அரசின் தாராள இலவச கொள்கை உள்பட பல்வேறு காரணங்கள் அதற்கு சொல்லப்படுகிறது. அதன் விளைவு, தொழிலாளர்களுக்கு முறையாக வழங்க வேண்டியது அந்தந்த காலகட்டத்தில் கிடைப்பதில்லை என்கிறார்கள். அரசு போக்குவரத்து கழகம் சேவைகானது என்றால் அந்நிர்வாக வருவாயில் ஏற்படும் நஷ்டத்தை அரசு நேரடியாக ஏற்கவேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. அதேபோல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். வாரிசு பணி நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கேட்கின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இந்த கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். எனவே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப்படும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று 9ம் தேதி அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனாலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படுகிறது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முயற்சியினால் தற்காலிக ஊழியர்களை நியமித்து பேருந்துகளை இயக்குகிறார்கள். இந்த இயக்கம் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது தெரியவில்லை. தொடர்ந்து தற்காலிக ஊழியர்களை கொண்டு பேருந்துகளை இயக்கமுடியும் என்பது சந்தேகம்தான். அதேவேளை அரசு போக்குவரத்து கழக நிர்வாகமும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தேர்ந்தெடுத்து அவற்றையாவது உடனடியாக நிறைவேற்றுவது அவசியம்தான்.
அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை நீண்ட காலம் இருந்து வருகிறது என்பது சாமான்ய மக்கள் வரை தெரியும். நிறைய பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கிறது, தற்போதுள்ள அரசு பொறுப்பேற்றியதில் இருந்து புதிய வழித்தடங்களில் புதிய பேருந்துகளை தொடக்கி வைப்பதை மக்கள் பார்க்கவில்லை. ஊழியர் பற்றாக்குறையாலும், இலவசங்களாலும் அரசு போக்குவரத்து கழகம் தள்ளாடி வருகிறது என்று அவ்வப்போது விசயம் தெரிந்தவர்கள் கூறிவருவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
எனவே போக்குவரத்துகழக ஊழியர்களின் கோரிக்கையை ஓரளவேணும் நிறைவேற்ற வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய தொகை கிடைக்காமல் நீண்ட காலம் இழுத்தடிக்கப்படுகிறார்கள் என்பது போக்குவரத்து கழகத்துக்கு பெருத்த அவமானமாகும். வேலை நிறுத்ததை உடைப்பதில் இருந்த திறமையை அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் காட்ட வேண்டும்.