தூத்துக்குடி ரேசன் கடைகளில் ரூ.1000, கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு - கலெக்டர் தொடங்கி வைத்தார்

Thoothukudi collector

தூத்துக்குடி ரேசன் கடைகளில் ரூ.1000, கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு - கலெக்டர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட  போல்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நியாய விலைக்கடையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் பெரியசாமி,  தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார் ஆகியோர் இன்று (10.01.2024) வழங்கி தொடங்கி வைத்தார்கள்.

அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ.1000 ரொக்கம் மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள்  வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். அதனடிப்படையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட  போல்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நியாய விலைக்கடையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் வேஷ்டி, சேலை அடங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள அரிசி குடுப்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 5,26,561 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 960 நியாய விலைக்கடைகள் மூலமாக ரூ.56.65 கோடி மதிப்பில் மேற்படி ரூ.1000 ரொக்கம் மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்புகள் இன்று முதல் வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், பொருட்கள் வழங்கப்பட்டதும் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் தைப்பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே வழங்கப்படும்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும் வகையில், வழங்கப்பட்டுவரும் ரூ.1000 ரொக்கம் மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்புகள் வழங்கும் பணிகளைக் கண்காணித்திட தூத்துக்குடி வட்டாரத்திற்கு தூத்துக்குடி துணைப் பதிவாளர் (பொ.வி.தி.) (9952550121), திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டாரங்களுக்கு தூத்துக்குடி சரக துணைப் பதிவாளர் (9788252627), திருச்செந்தூர் மற்றும் ஆழ்வார்திருநகரி வட்டாரங்களுக்கு பிரகாசபுரம் நகர கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளர் (9443208684),  உடன்குடி மற்றும் சாத்தான்குளம் வட்டாரங்களுக்கு திருச்செந்தூர் நகர கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளர் (9442113501), கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம் ஆகிய வட்டாரங்களுக்கு கோவில்பட்டி சரக துணைப்பதிவாளர் (9865263443), புதூர் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டாரங்களுக்கு மேலூர் நகர கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளர் (9488064999), கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மேற்படி பொங்கல் பரிசுத் தொகுப்புகள் பெறுவதில் புகார் ஏதேனும் இருப்பின் மேற்கண்ட கண்காணிப்பு அலுவலர்களின் கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முரளிகண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், மண்டல மேலாளர் துணை ஆட்சியர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) தமிழரசி, தனிவட்டாட்சியர் (குடிமைப்பெருள் வழங்கல்) ஜாண்சன்தேவசகாயம், வடக்கு மண்டலத்தலைவர் நிர்மல், தூத்துக்குடி மாநகராட்சி 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜாக்லின்ஜெயா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.