அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் மோஷமான சாலை - சாயர்புரத்தில் தொடரும் அவலம்.!

news

அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் மோஷமான சாலை - சாயர்புரத்தில் தொடரும் அவலம்.!

சாலைகள் பழுதானால் அதில் விபத்துக்கள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். உடனுக்குடன் அதனை சீரமைத்தால்தான் விபத்துக்களை தவிர்க்க முடியும். அதில் அலட்சியம் இருக்கும்போது விபத்துக்கள் தொடர்கதையாகிவிடுகிறது. அப்படித்தான் தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் மெயின் பஜார் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

சமீபத்தில் மழை வெள்ளம் தென் தமிழகத்தையே ஆட்டிபடைத்ததில் சாயர்புரமும் அடங்கும்.  அன்றிலிருந்து இப்போது வரை முறையாக சீரமைப்பு பணிகள் நடைபெறாமல் இருப்பதால் விபத்துக்கள் நடந்து வருகிறது. சிவத்தையாபுரத்தை சேர்ந்த தம்பதி மோட்டார் பைக்கில் சென்றபோது தடுமாறிவிழுந்து விபத்தில் சிக்கியது. அதில் பெண் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தே போனார். அதன் பிறகு இந்த சாலையில் வெறும் சல்லியை கொட்டி சமன் படுத்தியுள்ளனர். ஆனால் முழுமையாக சாலையை சீரமைக்கும் பணிகள் நடந்தபாடில்லை. எனவே தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகிறது.

அந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பேருந்து பயணிகள் கூட பேருந்தில் சாதாரணமாக பயணிக்க முடியாத அளவிற்கு சிவத்தையாபுரம் சாலை முதல் சிவத்தையாபுரம், புளியநகர், நடுவக்குறிச்சி, சாயர்புரம் மெயின் பஜார், சுப்பிரமணியபுரம், நட்டாத்தி, கொம்புகாரன் பொட்டல் வரையிலான சாலை மோசமாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதனை உடனே சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.