தமிழ்நாடு மெர்கன் டைல் வங்கி 103 வது ஆண்டு விழா கொண்டாட்டம்
TMB News
தமிழ்நாடு மெர்கன் டைல் வங்கி 103 வது ஆண்டு நிறுவன விழாவினை கொண்டாடுவது பெருமை மட்டுமல்ல..அது நம் சமுதாயத்தின் வளர்ச்சி என்று டிஎம்பி விழாவில் சோகோ நிறுவன சிஇஓ ஸ்ரீதர் வேம்பு பேசினார்.
தமிழ்நாடு மெர்கன் டைல் வங்கியின் 103வது ஆண்டு நிறுவன விழா தூத்துக்குடியில் நடந்தது. வங்கியின் பொதுமேலாளர் அசோக்குமார் வரவேற்றார். விழாவில் தினமலர் தினேஷ் மற்றும் வங்கி முன்னாள் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். செய்யது குருப் ஆப் கம்பெனி தலைவர் பத்கூர் ரப்பாணி,வங்கியின் நிர்வாக இயக்குனர் வின்சென்ட் வாழ்த்திப் பேசினர். சிஇஓ சாலே எஸ் நாயர் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது : வங்கியின் 103 வது நிறுவன விழா என்பது உடைக்க முடியாத வரலாற்று சாதனையை இந்த வங்கி பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் தேவை அறிந்து ஊழியர்கள் ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர், வங்கியை மறுகட்டமைப்பு செய்துள்ளோம்.பல கிளைகள் ஒருங்கிணைக்கப்பட்டு,வாடிக்கையாளர்களுக்கான சேவை, வர்த்தகம், ரீஜெனரேசன் போன்றவை குறிப்பிடத்தக்க மாற்றமாக உள்ளது. வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள், வங்கி ஊழியர்கள் என்ற மூன்று தூண்கள் தேவை. இதுபோன்ற சிறப்பம்சங்களுடன் வங்கி 103 வது நிறுவனவிழாவை கொண்டாடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து வங்கியின் புதியசேவைகளான ஜி.எஸ்.டி யை டிஜிட்டல் மூலம் செலுத்துவது, இ-பேங்கிங், இன்ஸ்டாகிட் க்யூ ஆர் கோடு மூலம் பணம் பரிவர்த்தனை, பல்ஸ் பே எனும் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பல வசதிகளுடன் வங்கி சேவை போன்றவை அறிமுகம் செய்யப்பட்டன. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சோகோ கார்ப்பரேஷன் தலைமை நிர்வாகி ஸ்ரீதர் வேம்பு பேசியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சி, டிஜிட்டல் பயன்பாடு, உலக மயமாக்கல் போன்ற வளர்ச்சி உலகில் உள்ளன. தொழில்நுட்பம், டிஜிட்டல் மயத்துடன் வளர்ச்சி என்றாலும் நமது பாரம்பரியத்தை, கலாசாரத்தை விடாமல் இருக்க வேண்டும். தமிழில் நாம் கூறுவது போல் சென்றிருவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் யாவும் கொண்டு இங்கு சேர்ப்பீர். இதுதான் அடிப்படை. நம் அடையாளத்தை நாம் இழக்க கூடாது. பல மொழிகள் தெரிந்திருந்தாலும், தமிழில்தான் பேசுகிறோம். தென்காசில் இருந்து கொண்டு அதிகாலையில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் தொழில் ரீதியாக பேசுகிறேன். ஆராய்ச்சி முன்னேற்றம் தென் மாவட்டங்களுக்கும் வரவேண்டும். உலக அளவில் தற்போது ஆராய்ச்சி முன்னேற்றம் என்பது சென்னையை நோக்கியே உள்ளது. இந்த வேலைகளை மதுரை,நெல்லை,தூத்துக்குடிக்கு உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் கொண்டு வரவேண்டும். உலகளாவிய வாடிக்கையாளர்களை பிடிக்க வேண்டும். வாய்ஸ் ஆப் தென்காசி துவங்கினோம். தற்போது வாய்ஸ் ஆப் தூத்துக்குடி,நெல்லை,மதுரை என துவங்க உள்ளோம். வளர்ச்சியுடன் நமது பாரம்பரியம், கலாச்சாரத்தை மறக்க கூடாது. ஆராய்ச்சியுடன் முன்னேற்றம் என்பது ஊரக வளர்ச்சியில் இருந்து வரவேண்டும்.
தென்காசி,தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் தொகை அளவு உள்ள எஸ்டோனியா நாடு, 10 சதவீதம் முன்னேறுகிறது என்றால், நாம் ஏன் முன்னேற முடியாது. இதுபோன்ற சாதனையைத்தான் தமிழ் நாடு மெர்கன்டைல் வங்கி செய்து சாதித்துள்ளது. தற்போது 103 வது நிறுவன விழாவை கொண்டாடுகிறது. இது தான் பெருமை.நம் வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி என எல்லா மட்டத்திலும் வளர்ச்சி என்பது இருக்க வேண்டும் என்றார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. துணை நிர்வாக அதிகாரி சுந்தரேஸ்குமார் நன்றி கூறினார்.