“அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய்” – EU–இந்திய FTA : உலக அரசியல், பொருளாதார வரலாற்றில் புதிய திருப்பம்

EU-INDIA FTA

“அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய்” – EU–இந்திய FTA : உலக அரசியல், பொருளாதார வரலாற்றில் புதிய திருப்பம்

கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியம் (European Union – EU) மற்றும் பாரதம் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA), உலக வர்த்தக அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், இந்த ஒப்பந்தத்தை “அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய்” என வர்ணித்து, “அதை நாங்கள் அடைந்து விட்டோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தது, சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியது.

அமெரிக்காவின் அழுத்தமான வரி கொள்கைகள், உலக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல் ஆகியவற்றுக்கு மத்தியில், EU–இந்திய ஒப்பந்தம் உலக அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்றில் முக்கியமான நகர்வாகக் கருதப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா, பல நாடுகள் மீது அதிக வரிகளை விதித்து, தன் நிபந்தனைகளுக்கு உடன்படச் செய்யும் போக்கை பின்பற்றி வருகிறது. இந்தியாவுக்கும் 50% வரி விதிக்கும் மிரட்டல் உள்ளிட்ட அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், அதனை புறக்கணித்து EU-வும் பாரதமும் இணைந்து இந்த வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருப்பது, உலக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை, அமெரிக்காவின் வர்த்தக மேலாதிக்கத்திற்கு எதிரான புதிய மாற்று யுக்தி என்றும், பல சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ், CNBC, BBC, NBC போன்ற உலகப் புகழ்பெற்ற ஊடகங்கள், இந்த ஒப்பந்தத்தை வானளாவப் புகழ்ந்துள்ளன. “ட்ரம்ப்பின் கணிக்க முடியாத வர்த்தக கொள்கைகளால் துண்டிக்கப்பட்ட உலக வர்த்தகத்தை, EU–இந்திய ஒப்பந்தம் மீண்டும் இணைத்துள்ளது” என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டது. “200 கோடி மக்களை இணைக்கும் பெரும் சந்தை உருவாகியுள்ளது” என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது.

அமெரிக்க வர்த்தக அமைப்பின் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூட, “இந்த ஒப்பந்தத்தால் பாரதம் உலக வர்த்தக உச்சியில் நிற்கிறது” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ப்ளூம்பெர்க் ஆய்வு: ‘அனைத்து பாதைகளும் மோடியை நோக்கி’பிரபல சர்வதேச ஊடகமான ப்ளூம்பெர்க்,“All Roads Lead to Modi as World Hedges Trump” என்ற தலைப்பில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், EU–இந்திய ஒப்பந்தம், இன்றைய உலக அரசியல் நகர்வுகளின் பிரதிபலிப்பு ட்ரம்ப் புறக்கணித்த நாடுகளுக்கு டெல்லி முக்கிய பங்காளியாக மாறியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் பாரதத்தை நோக்கி நகர்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பாரதத்தை நாடி வருவது, இந்தியாவின் சர்வதேச செல்வாக்கு உயர்ந்திருப்பதற்கான சான்றாகக் கூறப்படுகிறது. பொருளாதார பலன்: இந்தியாவுக்கு சாதகமான ஒப்பந்தம் EU என்பது 27 நாடுகளை உள்ளடக்கிய ஒரே வர்த்தக கட்டமைப்பு. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ஜவுளி, தோல், சிறு-குறு தொழில்களுக்கு EU சந்தை முழுமையாக திறக்கப்படுகிறது. விவசாயம், மீன்வளம் போன்ற முக்கிய துறைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. EU இந்தியப் பொருட்களுக்கு ரூ.44,000 கோடி மதிப்பிலான இறக்குமதி வரிவிலக்கு வழங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி போன்ற போட்டி நாடுகளின் ஏற்றுமதிக்கு பின்னடைவு ஏற்படும். 

தற்போது 7 பில்லியன் யூரோவாக உள்ள இந்திய ஜவுளி ஏற்றுமதி, 30–40 பில்லியன் யூரோ வரை உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். 24 மொழிகளில் வாழ்த்து – ராஜதந்திரத்தின் புதிய வடிவம். EU ஒன்றியத்தில் 24 மொழிகள் பேசப்படுகின்றன. 

இந்த ஒப்பந்தத்தை வரவேற்று, பிரதமர் நரேந்திர மோடி, EU-வின் 27 நாடுகளுக்கும், 24 மொழிகளில் வாழ்த்துச் செய்தி அனுப்பினார். இதனை, ஐரோப்பிய ஆணையத்தின் மூத்த நிபுணர் டாக்டர் கிறிஸ்டினா வான் பெர்கன், “ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை கலாசார நல்லுறவாக மாற்றிய அழகான ராஜதந்திரம்” என்று பாராட்டினார்.

ஒட்டுமொத்தமாக, EU–பாரத வர்த்தக ஒப்பந்தம்: உலக அரசியல் அரங்கில் இந்தியாவின் மதிப்பு மற்றும் மரியாதையை உயர்த்தியுள்ளது. பொருளாதார ரீதியில் இந்தியாவுக்கு நீண்டகால நன்மை தரக்கூடியது. அமெரிக்க மையப்படுத்தப்பட்ட உலக வர்த்தக அமைப்பிற்கு மாற்றாக, புதிய பன்முக வர்த்தக பாதையை உருவாக்கியுள்ளது என்று கூறலாம்.