தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் வாக்காளர்கள் 13,76,624 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

election news

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் வாக்காளர்கள் 13,76,624 -  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர்  இளம்பகவத் நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை  வெளியிட்டார்.  

அதன்படி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 99,913 ஆண்கள், 1,03,804 பெண்கள், 15 இதரர் என மொத்தம் 2,03,732 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,20,614 ஆண்கள், 1,27,623 பெண்கள் 63 இதரர் என மொத்தம் 2,48,300 வாக்காளர்கள் உள்ளனர். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,12,367 ஆண்கள், 1,18,305 பெண்கள், 30 இதரர் என மொத்தம் 2,30,702 வாக்காளர்கள் உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,05,099 ஆண்கள் 1,07,782 பெண்கள், 4 இதரர் என மொத்தம் 2,12,885 வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில்  1,17,432 ஆண்கள், 1,23,502 பெண்கள், 54இதரர் என மொத்தம் 2,40,988 வாக்காளர்கள் உள்ளனர். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,16,317 ஆண்கள், 1,23,673 பெண்கள்,  27 இதரர் என மொத்தம் 2,40,017 வாக்காளர்கள் உள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளிலும் மொத்தம் 6,71,742 ஆண் வாக்காளர்களும், 7,04,689 பெண் வாக்காளர்களும், 193 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பாலின வாரியாகப் பார்க்கும்போது, ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை 32,947 கூடுதலாக உள்ளது. மாவட்டத்தில் 2673 ஆண், 65 பெண் என மொத்தம் 2738 பணித் தொகுதி வாக்காளர்கள் உள்ளனர். மேலும் மொத்தம் 980 வாக்குச்சாவடி மையங்களில் 1864 வாக்குச்சாவடிகள் உள்ளது. 

தொடர்ந்து கலெக்டர் இளம்பகவத் கூறுகையில், மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது கருத்துக்கள் இருப்பின், அவற்றை வரும் 25-02-2026-க்குள் தெரிவிக்குமாறு பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 18 வயது பூர்த்தியான அனைத்து நபர்களும் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க அனைத்து வேலை நாட்களிலும் சம்பந்தபட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் தேர்தல் பிரிவில் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். மேலும் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்டவைகளை  www.voters.eci.gov.in  என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களை சமர்பித்து திருத்தி கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் தகவல்களை பெறவும், இடர்பாடுகளை தெரிவிக்கவும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய இலவச தொலைபேசி எண் : 0461 -1950-ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் அந்தந்த வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களையும் தொடர்பு கொள்ளலாம் என்றார். 

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, சப்-கலெக்டர் பிரபு உள்ளிட்ட அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.