“மக்களுடன் முதல்வர்” திட்ட செயல்பாடுகள் எப்படி ? - தூத்துக்குடி கலெக்டர், பயனாளிகளிடம் விசாரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்
chief Minister
“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு - காணொலி வாயிலாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுமக்களுடன் முகாம் ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.07.2024) தலைமைச் செயலகத்தில், “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுகூட்டம் மேற்கொண்டதோடு, காணொலி வாயிலாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி முகாம் ஏற்பாடுகள் குறித்தும், பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பயனாளிகளிடமும் கேட்டறிந்தார்.
“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் ஆய்வுகூட்டம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து காணொலி வாயிலாக நாகப்பட்டினம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி முகாம் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன், முகாமிற்கு மக்களுடைய வரவேற்பு எப்படி இருக்கிறது என்றும், முகாமிற்கு வருகை தந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்றும், எத்தனை முகாம்கள் நடைபெற்றுள்ளன என்றும், இதுவரை நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை குறித்தும், சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை மனுக்கள் பெறப்படுகிறது என்பது குறித்தும், அதிகமாக எந்தந்த துறைகளின் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்படுகிறது, முகாம்களில் எத்தனை கவுன்ட்டர்கள் மற்றும் கணிணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன போன்ற விவரங்களை கேட்டறிந்தார். “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு விளம்பரம் மூலம் எவ்வாறு தெரிவிக்கப்பட்டது குறித்தும், மக்களுடன் முதல்வர் முகாம்களை சிறப்பாக நடத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்களுடன் நடத்தப்பட்ட முன்னேற்பாடு கூட்டங்கள் குறித்தும், மனுதாரர்களிடம் கனிவான, அன்பான அணுகுமுறையுடன் அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும், தெரிவித்ததுடன் முகாம்கள் காலை எத்தனை மணிக்கு தொடங்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாவட்டத்தில் 72 முகாம்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, 32 முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டு, 26,468 மனுக்கள் பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். ஒவ்வொரு முகாம்களிலும் சராசரியாக 800 மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும், இதில் பெயர் மாற்றம், மனை உட்பிரிவு பெயர் மாற்றம் சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ் வழங்க கோரியும், மின்சார இணைப்பு பெயர் மாற்றம் போன்ற கோரிக்கை மனுக்கள் அதிகமாக வருவாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர், முகாம்களுக்கு வருகை தந்த பொதுமக்களிடம் கலந்துரையாடியனார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, ஸ்ரீதேவி, குலசேகரப்பட்டணத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருவதாகவும், அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி பயின்றதாகவும், புதுமைப் பெண் திட்டம் பற்றி அறிந்து, தற்போது அத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக மனு அளிக்க வந்ததாகவும், இத்திட்டம் மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாகும், தன்னுடைய சக தோழிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இம்மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பட்டதாரி இளைஞர் இசக்கிமுத்து,வருவாய் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் கோரி இன்று விண்ணப்பித்தாகவும், உடனடியாக இரண்டு சான்றிதழ்களும் கிடைத்து விட்டதாகவும், அதற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
ப்ரிசில்லா, மக்களுடன் முதல்வர் முகாமில் அளித்த மனு மூலம் தனக்கு உடனடியாக உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இம்மாவட்டத்தில் பட்டா மாற்றம் கோரி விண்ணப்பித்த மதுபாலா, தனக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முதலமைச்சர் கேட்டதற்கு, இத்திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமென்றும், தங்கள் பகுதி பெண்கள் இத்திட்டத்தால் மிகவும் பயனடைந்து வருவதாகவும், மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கு, “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம், மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு கண்டு, உரிய பயன்கள் பயனாளிகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 3 பேருக்கு சக்கர நாற்காலிகளையும், 2 பேருக்கு காதொலி கருவியையும் வழங்கினார். காதொலி கருவி கேட்டு மனு அளித்த காது கேட்க முடியாத மற்றும் வாய் பேச முடியாத செல்வன்.சரவணனுக்கு உடனடியாக காதொலி கருவியை வழங்கினார். மேலும் தொழிலாளர் நல வாரியம் மூலம் 5 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.பொற்செல்வன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலசிங், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
nadunilai.com