சாயர்புரம் பகுதியில் பேருந்து பற்றாக்குறை - நடத்துநர் படிக்கட்டில் பயணம் செய்யும் அளவில் அவல நிலை

Tnstc news

சாயர்புரம் பகுதியில் பேருந்து பற்றாக்குறை - நடத்துநர் படிக்கட்டில் பயணம் செய்யும் அளவில் அவல நிலை

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்து சேவை அவசியம் இருக்கிறது. எனவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும், கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதற்கு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளோ, ஏரல், ஆத்தூர், திருவைகுண்டம் என சுற்று வட்டார வழித்தடங்களையெல்லாம் சேர்த்து பேருந்து சேவைகள் அதிகம் இருக்கிறது என்று கணக்கு காட்டுகின்றனர். அவர்கள் கூறிவருவதற்கு மாறாக நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதாவது சாயர்புரம் பகுதியில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் உள்ளே நிற்க இடமில்லாமல் பேருந்தின் நடத்துநர் பேருந்தின் பின் பகுதியில் உள்ள ஏணிப்படியில் நின்று பயணம் செய்த புகைப்படம் ஆதாரமாக வெளியாகியிருக்கிறது.  

சாயர்புரம் பகுதியில் பள்ளி, கல்லூரி என பல கல்வி நிலையங்கள் இருக்கிறது. தூத்துக்குடி, ஏரல், நாசரேத் உள்ளிட்ட பகுதியில் இருந்து தினசரி கல்வி சம்பந்தபட்டவர்கள் சாயர்புரம் பகுதிக்கு வந்து செல்கின்றனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பல இயக்கப்படுகிறது. ஆனாலும் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து பற்றாக்குறை இருந்து வருகிறது. அதனால் கூடுதல் பேருந்து வசதி தேவை என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் அது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. ஓட்டுநர் இல்லை, நடத்துநர் இல்லை, வண்டி இல்லை என்று அடுக்கடுக்கான காரணங்களை அவர்கள் கூறி இழுத்தடிக்கின்றனர். இதற்கு அவ்வழித்தடங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்து நிர்வாகங்களின் நிர்பந்தமும் அதற்கு காரணம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். 

காலையிலும், மாலையிலும்  மாணவர்களுக்கு பயன்பட கூடிய 578, 145 எஸ் எஸ் எஸ், 153 எக்ஸ் எஸ் 1 போன்ற பேருந்துகள் நிறுத்தபட்டுள்ளது. இவற்றையெல்லாம் மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அவற்றை கண்டுகொள்வதாக தெரியவில்லை. இதன் விளைவுதான் தனியார் பேருந்தில் நடத்துநர் ஏணிப்படியில் பயணம் செய்யும் அவலமாகும்.  இந்த நிலைக்கு அரசு போக்குவரத்து கழகமே காரணமாகும்.    

தூத்துக்குடியில் இருந்து காலை 9.45 மணிக்கும், மாலை 5.45 மணிக்கும் கிளம்ப வேண்டிய 578 என்கிற பேருந்து, திருவைகுண்டத்தில் காலை 8.25 மணிக்கு கிளம்பி தூத்துக்குடி சென்று அங்கிருந்து எங்கேயோ சென்றுவிடுகிறது. அதற்கு பிறகு அந்த பேருந்தின் சேவை இப்பகுதியினருக்கு கிடைக்கவில்லை. திருவைகுண்டத்தில் காலை 8.25 மணிக்கு ஒரு பேருந்தை கிளம்ப செய்து அதனை மதுரைக்கும் செல்லும் வகையிலும், 578 என்கிற பேருந்தை தூத்துக்குடியில் காலை 9.45 மணி மற்றும் மாலை 5.45 மணிக்கு கிளம்பும்படியும், திருவைகுண்டத்தில் காலை 7.55, மாலை 4.00 மணிக்கு கிளம்பி தூத்துக்குடிக்கு செல்லும் வகையிலும் இயக்க வேண்டும்.

அதேபோல் 145 எஸ் எஸ் எஸ் என்கிற பேருந்தை மாணவ, மாணவியரின் நலனுக்காக அதிகாலை உவரியில் கிளம்பி திசையன்விளை, சாத்தான்குளம்,நாசரேத் வழியாக ஏரலுக்கு வந்து அங்கிருந்து 7.30 மணிக்கு கிளம்பி சாயர்புரம் வழியாக 8.45 மணிக்கு தூத்துக்குடி சென்று, அங்கிருந்து சரியாக 9,00 மணிக்கு கிளம்பி மீண்டும் அதே வழித்தடத்தில் நாசரேத் சென்று அங்கிருந்து மெஞ்ஞானபுரம்,செட்டியாபத்து,உடன்குடி வழியாகவோ, சாத்தான்குளம்,திசையன்விளை வழியாகவோ உவரிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து பிற்பகல் ஒரு மணிக்கு எடுத்து அதே வழித்தடத்தில் ஏரலுக்கு வந்து அங்கிருந்து மாலை 3.15 மணிக்கு கிளம்பி சாயர்புரம் வழியாக தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து 4.45 மணிக்கு கிளம்பி அதே வழித்தடத்தில் உவரி சென்று முடிக்கும்படி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.