பழங்குடியின மக்களுக்கு ஆதார், வாக்காளர்,குடும்ப அட்டை இருக்கு ஆனால் மின்சாரம் இல்லை - போராட போகிறதாம் பாஜக
Bjp
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் சுமார் 20 குடும்பங்களுக்கு நீண்ட காலமாக மின்சாரமே வழங்கப்படவில்லையாம். இதனையறிந்த தூத்துக்குடி தெற்குமாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், தனது கட்சியினருடன் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து பேசியிருக்கிறார். அம்மக்களும் விபரங்களை எடுத்து கூறியிருக்கின்றனர்.
உடனே களத்தில் இறங்கிய மாவட்ட தலைவர், மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், மண்டல் தலைவர் சரவணன், மண்டல் பிரபாரி பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் மகேஸ்வரன், மண்டல் பொதுச் செயலாளர் ராஜேஷ், மண்டல் துணைத் தலைவர் பொன் ராஜகோபால், மண்டல் செயலாளர் திருமதி மங்கையர்க்கரசி, நகர தலைவர் ஜோசப் துரைராஜ்,மண்டல் பொருளாளர் நவீன், ஆன்மீகப் பிரிவு செயலாளர் ராஜபாண்டி, சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் சுந்தர், தரவுதல மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் பிரவீன், அமைப்புசாரா பிரிவு செயலாளர் ராம் மோகன் ஆகியோருடன் சென்று தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், சாத்தான்குளம் பேரூராட்சி அம்மன் கோவில் தெரு மக்களை பாஜக சார்பில் சென்று பார்த்தோம். அப்போது அங்கு வசிக்கும் 20 குடும்பங்களின் அவல நிலையை கண்டு அதிர்ச்சியுற்றோம். 10 தலைமுறையாக வாழ்ந்து வரும் அந்த பழங்குடியின மக்களுக்கு வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை,குடும்ப அட்டை, தண்ணீர் மற்றும் ரோடு அனைத்தும் வழங்கியுள்ளது. ஆனால் வீடுகளுக்கு மின்சார வழங்க மறுத்து வருகிறது. சிறு குழந்தைகள்,பள்ளி மாணவ,மாணவிகள், வயது முதிர்ந்தோர் என அனைவரும் பல வருட காலமாக இருளில் வசித்து வருகின்றனர். 6 மணிக்கு மேல் இருளில் வாழும் அவலம், செல்போனிற்கு வெளிக்கடைகளில் தினம் ரூபாய் 10கொடுத்து சார்ஜ் ஏற்றுகிறார்கள். வீடுகலில் மின்சாரம் இல்லாததால் பள்ளி படிப்பை இடைநிறுத்தம் செய்துள்ளார்கள். சிறு குழந்தைகக்ளுக்கு கொசு மற்றும் விஷ ஜந்துக்கள் கடியில் முகம் மற்றும் உடல் முழுவதும் தழும்புகளோடு காணப்படுகிறார்கள். காட்டுநாயக்கர் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு ஜாதி சான்றிதழ் பல ஆண்டுகளாக மறுக்கப்பட்டு குழந்தைகள் மேல் படிப்புக்கு செல்ல முடியாமல் படிப்பை கை விட்டுள்ளனர். மழைவாழ் மக்களுக்கு நமது பாரத பிரதமர் உதவியால் மின்சாரம் கிடைக்கப்பெற்றும் நகரில் வாழும் மக்களுக்கு கிடைக்கவில்லையே?.ஆகவே தாங்கள் உடனே விசாரித்து நடவடிக்கை எடுத்து குழந்தைகளின் மேல்படிப்புக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். வழங்காவிடில் பாரதிய ஜனதாக கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து மாவட்ட தலைவர் சித்ராங்கதனிடம் கேட்டோம், ’’வீட்டுத்தீர்வை போட்டால்தான் மின்சாரம் வழங்கமுடியும் என்றால், அது தவிர மற்ற வசதிகள் அனைத்தும் அந்த மக்களுக்கு எப்படி கிடைக்கிறது?. நீண்டகாலமாக அப்பகுதியில் வாழும் அம்மக்களுக்கு எதாவது மாற்றுவழியை காட்டி அதன்மூலம் அவர்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லவா?. நிலம் சம்பந்தமாக சட்டம் பேசும் அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள இருபது குடும்பத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு குடுபத்துக்கு மட்டும் எப்படி மின்சாரம் கொடுத்தனர்?. அந்த குடும்பத்துக்கு எந்த சட்ட வழிமுறையை பின்பற்றினார்களோ அதே வழிமுறையை பின்பற்றி மற்றவர்களுக்கும் மின்சாரம் வழங்கவேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இந்த விசயத்தில் அரசு நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி பாஜக சார்பில் பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய போகிறோம்’’ என்றார் வேகமாக.