விரைவில் மழைகாலம் வரப்போகிறது : முக்காணி - ஆத்தூர் பாலம் சீரமைப்பது எப்போது ?

Bridge News

விரைவில் மழைகாலம் வரப்போகிறது : முக்காணி - ஆத்தூர் பாலம் சீரமைப்பது எப்போது ?

தாமிரபரணி கடைசியில் கடலில் கலக்கும் மிக அருகில் இருக்கிறது முக்காணி - ஆத்தூர் இடையிலான பாலம். தூத்துக்குடி - திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி - கன்னியாகுமரி பிரதான சாலையில் உள்ளதால் இந்த பாலத்தில் இடைவிடாத பயணங்கள் உண்டு. ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ள தாமிரபரணி ஆறு மழைகாலங்களில் ஆக்ரோஷம் கொள்வதை இந்த பாலத்தில் நின்று பார்க்கலாம். 

காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கட்டிய பாலம் உயரம் குறைவாக இருக்கிறது, உயரமும், அகலமும் கூடுதலாக புதிய பாலம் கட்டினார்கள். அந்த புதிய பாலம்தான் இப்போது மக்களுக்கு பயன்படாது சும்மா நிற்கிறது. ஒதுக்கி வைத்த காமராஜர் காலத்தில்தான் தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது. 

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில்  பெய்த அதி கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அந்த ஆக்ரோஷ வெள்ளத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் புதிய பாலம் சேதமாகியது. பாலத்தின் நடுப்பகுதி 2 அடிக்குத் கீழே இறங்கியது. மேற்கொண்டு அதில் வாகனங்கள் பயணித்தால் பெரிய ஆபத்தில் முடியும் என்று புதிய பாலத்தில் போக்குவரத்தை தடை செய்து மீண்டும் பாலத்தில் போக்குவரத்தை புதுப்பித்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சேதமான பாலம் சீரமைக்கப்படவில்லை.  விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பில் இருந்து கோரிக்கைவிடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுவரை எதுவுமே நடந்தபாடில்லை. 

அதேவேளை ஐஐடி குழு, பாலத்தின் நிலைமையையும், நிலைத்தன்மையையும் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளது என்கிறார்கள். அதனை தொடர்ந்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரியவில்லை. நீண்ட காலமாக பாலம் பழுது சீரமைக்கபடாமல் கிடப்பது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பழைய பாலத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் பழுதான புதிய பாலம் வழியாக வாகனங்கள் சென்றது. வேறு வழியில்லாமல் சில அதிகாரிகளே திருப்பிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. 

நிலமை இப்படி இருப்பதற்கு நடுவே, இவ்வாண்டு மழை அதிக அளவில் பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று வாணிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாகவும், அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்திருக்கிறார். அப்படியானால் இவ்வாண்டும் அதிக அளவில் மழை பெய்யும், தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்லும் என்று தெரிகிறது. அப்படி வெள்ளநீர் வந்தால் பழைய பாலத்தை அது தாண்டி விழும் என்பது அறிந்ததுதான். அப்படியிருக்கும் போது புதிய பாலத்தை இவ்வளவு காலம் சீரமைக்காமல் போட்டிருப்பது அலட்சியம் என்றே பொதுமக்கள் கூறுகிறார்கள். 

ஆனாலும் சென்னை ஐஐடி, பிற தொழிற்நுட்ப முனையங்களில் இருந்து ஒரு சிறப்பு குழு (expert panel) இந்த பாலத்தின் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு குறித்த பரிசோதனையை செய்துவிட்டது என்றும், அப்பின் “in-principle” ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதுபோல் மாவட்ட அளவிலான குழு (State Highways Department) பாதிக்கப்பட்ட பாலங்களை நிர்மாண / மறுசீரமைக்க நிதி ஒதுக்கி வைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது என்றாலும் அதெல்லாம் எப்போது நடைபெறும் என்பதுதான் இப்போது கேள்வியாக உள்ளது. மிக விரைவில் மழைகாலம் வர உள்ளது. அப்போது வேலை செய்ய முடியாது. அப்படியானால் இந்தாண்டும் மழை வெள்ளத்தில் மக்கள் திண்டாட வேண்டியதுதானா?

நெருக்கடியான மழை காலத்தில் பழைய பாலத்தை தாண்டி தண்ணீர் செல்லும் போது தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையிலான போக்குவரத்திற்கு ஏரல் பாலத்தைதான் பயன்படுத்தியாக வேண்டும் போல் தெரிகிறது. அப்படியொரு நிலை இருக்குமானால் முக்காணியில் இருந்து ஏரல் செல்லும் சாலை, ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலை, ஏரலில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை இப்போதே அகற்றி வைப்பது நல்லது. அதுபோல் அந்த சாலைகளை நல்ல முறையில் சீரமைத்து வைப்பதும் நல்லது. இதையெல்லாம் மாவட்ட நிர்வாகம் ஸ்பெசல் உத்தரவாக போட்டு செயல்படுத்துவது நல்லது.