தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்துக்குள் சாலை வழியாக செல்லும் நகர பேருந்துகளுக்கு இடம் ஒதுக்கி கொடுத்தார் மேயர்
Thoothukudi Bus stand
தூத்துக்குடியில் பழைய,புதிய பேருந்து நிலையங்கள் இருக்கிறது. பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு நகர பேருந்துகள் மற்றும் தெற்கு,மேற்கு வழித்தட பேருந்துகள் நிறுத்தப்படுகிறது. தொலை தூர மற்றும் வடக்கு, கிழக்கு வழித்தட பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகிறது.
சமீபகாலமாக புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலை வழியாக செல்லும் நகர பேருந்துகள் அச்சாலையில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறது. இதனால் அந்த பேருந்துகளில் ஏற வேண்டிய பயணிகள் அச்சாலையோரத்திலேயே நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வெயில் மற்றும் மழை வந்தாலும் அவர்கள் அங்கு நின்றுதான் பஸ் ஏறியாக வேண்டும் என்கிற நிலையில், அந்த பேருந்துகளையும், புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து ஆட்களை இறக்கி, ஏற்றி சென்றால் நன்றாக இருக்கும் என்று பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதனை நிறைவேற்றும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக புதிய பேருந்து நிலையத்தில் உழவர் சந்தை அருகில் பஸ் நிறுத்தங்களை உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளதை பார்வையிட்ட மேயர் ஜெகன்பெரியசாமி, அப்பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்பது தவிர்க்கப்படுகிறது. அவர்கள் நிழலில் நின்று கொள்ளவும், கழிவறைகளை பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்றார். இதனை பயணிகளும், பொதுமக்களும் வரவேற்கின்றனர்.