குலசேகரன்பட்டினத்தில் ஒரு ராக்கெட் ஏவுதளம்.! - கல்வியாளர் Dr.K. சுதா
Dr.K.Sudha
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன் பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளம் குறித்து கல்வியாளர் டாக்டர் கே.சுதாவின் பார்வையில் ஒரு பகுதி
"தசரா என்றால் முதலில் மைசூர் இரண்டாவது குலசை" ராக்கெட் ஏவுதளம் என்றால் முதலில் ஸ்ரீஹரிக்கோட்டா, இரண்டாவது குலசேகரப்பட்டினம். ஆம்,இஸ்ரோவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம்.
இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை தொடர்ந்து இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட இருப்பது தூத்துக்குடி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து அரைவட்ட வடிவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
குலசேகரன்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களான மாதவன் குறிச்சி, கூடல் நகர், அமராபுரம் மற்றும் பள்ளக்குறிச்சி, அழகப்பபுரம் ஆகிய பகுதிகளில் 2,376 ஏக்கர் நிலத்தில் ஏவுதளம் அமைகின்றது.
குலசேகரன்பட்டினம் கடற்கரைப் பகுதி பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக கருதப்படுகிறது.
ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டர் குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாதவாரும் புயல், மின்னல், மழையின் தாக்கம் குறைவாக உள்ள இடமாகவும் இருக்க வேண்டும்.
குலசேகரன்பட்டினம் அருகே மணப்பாடு கடற்கரையில் மணலும் பாறையும் கலந்த குன்று வளைவாக இயற்கையாக அமைந்து அரண் போன்று, நின்று புயல் போன்ற பேரிடரை தடுக்கக்கூடியதாக உள்ளது. இதனால், ராக்கெட் ஏவுதளத்துக்கு ஏற்ற இடமாக குலசேகரன்பட்டினம் விளங்குகிறது.
ஸ்ரீஹரிகோட்டா, பூமத்திய ரேகை பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரபட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. எனவே, குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவும்போது அதிகளவில் எரிபொருள் மிச்சமாகும். மேலும், இங்கிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் மீது பறந்துவிடாமல் இருக்க, தென்கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர், கிழக்கு நோக்கித் திசை திருப்பப்படுகிறது. ஆனால், குலசையில் இருந்து ஏவும்போது திசை திருப்பிவிட வேண்டிய அவசியமில்லை.
ஸ்ரீஹரிகோட்டாவே ஒப்பிடும்போது, குலசேகரன்பட்டினத்தில் இருந்து விண்கலங்களை செலுத்தும்போது 30% எரிப்பொருள் மிச்சமாகும். மேலும், கூடுதல் எடையிலான விண்கலங்களையும் செலுத்த முடியும்.
நெல்லை மாவட்டம் காவல்கிணறில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவன மையத்திலிருந்து ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிபொருள் எஞ்சின் போன்றவற்றை சாலை மார்க்கமாக என்றால் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு கொண்டு செல்ல வேண்டும். அதுவே, குலசேகரன்பட்டினத்துக்கு என்றால் சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில்தான் இதன் மூலம் குலசேகரன்பட்டினத்திற்கு எரிபொருள் போன்றவற்றை எளிதாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொண்டுவர முடியும்.
குலசேகரபட்டினம் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. போன்ற சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதே இஸ்ரோவின் திட்டம். சிறிய ரக ராக்கெட் பாகங்களை உருவாக்குவதும், ஒன்று சேர்த்து ஏவுவதும் எளிதானது என்பதால், "அத்தகைய சிறிய ராக்கெட்டுகளுக்கான ஒரு சிறப்பு விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது மிகவும் முக்கியம்.
இதன்மூலம் பெரிய ராக்கெட் தயாரிப்புக்கு நீண்ட காலம் காத்திருக்காமல் "தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் சிறிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இது வர்த்தகரீதியாக மிகப்பெரிய லாபம் அளிக்கும்.
குலசேகரபட்டினத்தில் புதிய ஏவுதளம் அமைப்பதன் மூலம் பல்லாயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். "குலசேகரபட்டினம் உலக விண்வெளி அறிவியல் வரைபடத்தில் முக்கிய இடம் பெறும்", என்பதில் நாம் இந்தியனாகவும் தமிழனாகவும் தூத்துக்குடி வாழ் மக்கள் என்பதாலும் நாம் பெருமிதம் கொள்வோம்.
Dr.K. சுதா,
கல்வியாளர்