வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவை வரவேற்கும் பாஜக ஊடகப்பிரிவு அன்னபூர்ணா
BJP
வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவை வரவேற்று, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஊடகப்பிரிவு தமிழ் மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியின் பயன்பாடு, கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்தில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இதனை சரிசெய்யும் நோக்கில், மத்திய அரசு ஏற்கனவே அமலில் உள்ள வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் (FCRA) முக்கிய திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு, அதில் நிதி வரவு-செலவு கண்காணிப்பு, வெளிநாட்டு நிதி பயன்பாட்டின் கட்டுப்பாடு, பதிவு மற்றும் புதுப்பிப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த மசோதாவுக்கு எதிராக சில கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், லோக்சபாவின் அலுவல் பட்டியலில் மசோதா விவாதம் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவைத் தொடங்கும் முன்பே இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சபை கூடும் போதும் அதே நிலை தொடர்ந்ததால் கடும் அமளி ஏற்பட்டது.
அப்போது பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “கேரள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஓட்டுவங்கி அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் தேவையற்ற பிரச்சினையை உருவாக்குகின்றன. எந்த மதத்தையோ அல்லது குறிப்பிட்ட அமைப்புகளையோ குறிவைத்து இந்த மசோதா கொண்டு வரப்படவில்லை. தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்று விளக்கமளித்தார்.
அமளி தொடர்ந்து நீடித்ததால் மசோதா நிறைவேற்றப்படாமல், லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் எதிர்காலத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஊடகப்பிரிவு தமிழ் மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா வெளியிட்ட அறிக்கையில், இந்த சட்டத்திருத்தம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சமூக அமைப்புகளை பாதுகாக்கும் முக்கியமான நடவடிக்கையாகும். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சட்டத்தை கொண்டு வருவது பாராட்டத்தக்கது.
மேலும், இந்த திருத்தச்சட்டம் அமலுக்கு வந்தால், வெளிநாட்டு நிதி பயன்பாட்டில் முழுமையான வெளிப்படைத்தன்மை ஏற்படும், நிதி தவறான பயன்பாடு கட்டுப்படுத்தப்படும், வெளிநாட்டு தலையீடு குறையும், தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அமைதி வலுப்பெறும், நிதி பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மை அதிகரிக்கும், சமூக சேவை அமைப்புகள் பொறுப்புடன் செயல்பட ஒழுங்கு உருவாகும் என பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பொதுநலனையும், தேசிய நலனையும் முன்னிலைப்படுத்தி மத்திய அரசு மேற்கொள்ளும் இத்தகைய சட்ட நடவடிக்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
nadunilai.com