தூத்துக்குடியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை பணிக்கு தயார் - ஆட்சியர் விஷுமகாஜன் தகவல்

Election news

தூத்துக்குடியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை பணிக்கு தயார் - ஆட்சியர் விஷுமகாஜன் தகவல்

தூத்துக்குடியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 420 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.   

இது குறித்து ஆட்சியர் தரப்பில் கூறப்படுவதாவது : 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு துணை ராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 187 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் முகவர்களும் இரவு, பகலாக வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (திங்கட்கிழமை)காலை 8 மணிக்கு துவங்கி நடக்கிறது. 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக 6 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணும் பணிக்காக 102 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 102 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 102 நுண்பார்வையாளர்கள், 102 உதவியாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைகளில் 12 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 420 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 15,264 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் 5,998 பேரும், சேவை வாக்காளர்கள் 499 பேர் என 21,761 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நாளை மறுநாள் காலை 8 மணி வரை தபால் வாக்குகள் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தபால் வாக்குக்களை எண்ணும் பணிக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நிலையில் 18 அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் 24 பேர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் 24 பேர், நுண்பார்வையாளர்கள் 24 பேர், உதவியாளர்கள் 24 பேர் ஆகமொத்தம் 114 அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.  வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலர்கள் நாளை மறுநாள் காலையில் சுழற்சி முறையில் மேஜை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளனர். 

சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுற்றுகளின் எண்ணிக்கை அமையும். அதிகபட்சமாக தூத்துக்குடி தொகுதியில் 26 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும். மாலைக்குள் முடிவுகள் முழுமையாக தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளாத்திகுளம் தொகுதியில் 15, தூத்துக்குடியில் 15, திருச்செந்தூரில் 13, ஸ்ரீவைகுண்டத்தில் 15, ஓட்டப்பிடாரத்தில் 13, கோவில்பட்டியில் 21 என மொத்தம் 92 வேட்பாளர்கள் பெறும் வாக்குகள் விவரம் தெரியவரும். வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் விஷூ மகாஜன் மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து வருகின்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் விபரம் வருமாறு :

விளாத்திகுளம் தொகுதியில் மொத்தமுள்ள 2,04,982 வாக்காளர்களில்  82,815 ஆண்கள், 89,728 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 12 பேர் என மொத்தம் 1,72,555 வாக்குகள் பதிவாகியுள்ளது. இது 84.18 சதவீதமாகும், தூத்துக்குடி தொகுதியில் மொத்தமுள்ள 2,50,587 வாக்காளர்களில் 97,716 ஆண்கள், 1,05,014 பெண்கள், 40 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,02,770 வாக்குகள் பதிவானது. இது 80.92 சதவீதமாகும்.

திருச்செந்தூர் தொகுதியில் மொத்தமுள்ள 2,32,933 வாக்காளர்களில் 87,352 ஆண்கள், 96,313 பெண்கள், 20 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,83,685 வாக்குகள் பதிவாகியுள்ளது. இது 78.86 சதவீதமாகும். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மொத்தமுள்ள 2,14,268 வாக்காளர்களில் 84,316 ஆண்கள், 89,159 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,73,479 வாக்குகள் பதிவாகியுள்ளது. இது 80.96 சதவீதமாகும்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் மொத்தமுள்ள 2,43,756 வாக்காளர்களில் 93,195 ஆண்கள், 99,964 பெண்கள், 23 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,93,182 வாக்குகளும் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது 79.25 சதவீதமாகும். கோவில்பட்டி தொகுதியில் மொத்தமுள்ள 2,41,660 வாக்காளர்களில் 90,024 ஆண்கள், 1,01,771 பெண்கள், 12 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,91,807 வாக்குகள் பதிவாகியுள்ளது. இது 79.37 சதவீதமாகும்.

மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் மொத்தமுள்ள 13,88,186 வாக்காளர்களில் 11,17,478 வாக்குகள் பதிவாகியுள்ளது. இது 80.5 சதவீதமாகும்.