அக்டோபர் 15 முதல் ரூ2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனை: வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை

UPI NEWS

அக்டோபர் 15 முதல் ரூ2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனை: வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட பணப் பரிவர்த்தனைகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள UPI மூலம் பணம் செலுத்துவது தொடர்பாக புதிய கட்டண நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆனால், இதனால் பொதுமக்கள் UPI பயன்படுத்த அச்சப்பட வேண்டிய நிலை இல்லை என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, 2026 அக்டோபர் 15 முதல் குறிப்பிட்ட வணிகர்களுக்கு ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத Merchant Discount Rate (MDR) விதிக்கப்படும். இந்த கட்டணத்தை வணிகர்களே செலுத்த வேண்டும்; வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு கடை அல்லது வணிக நிறுவனத்திற்கு UPI மூலம் ரூ.2,000 வரை செலுத்தப்படும் தொகைக்கு MDR கிடையாது. அதேபோல், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட தனிநபர்களுக்கு பணம் அனுப்பும் P2P UPI பரிவர்த்தனைகளுக்கு தொகை எவ்வளவு இருந்தாலும் கட்டணம் இல்லை. 

ஒரு வாடிக்கையாளர் வணிகருக்கு UPI மூலம் ரூ.10,000 செலுத்தினால், புதிய விதிமுறைக்கு உட்பட்ட வணிகருக்கு 0.4 சதவீதம் என்ற அடிப்படையில் ரூ.40 MDR கணக்கிடப்படும். ஆனால் இந்த ரூ.40-ஐ வாடிக்கையாளர் தனியாக செலுத்த வேண்டியதில்லை. வணிகரின் பரிவர்த்தனைச் செலவில் அது கணக்கிடப்படும். ஒரு பரிவர்த்தனைக்கு MDR அதிகபட்சம் ரூ.300 என்ற உச்சவரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. UPI QR மூலம் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை பெறும் சிறு வணிகர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு Zero-MDR நடைமுறை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் சிறிய கடைகள், தெருவோர விற்பனையாளர்கள் போன்றவர்களின் வழக்கமான UPI வசதியில் கூடுதல் கட்டணச் சுமை ஏற்படாது. 

மத்திய நிதியமைச்சகத்தின் தகவலின்படி, புதிய MDR நடைமுறை குறிப்பிட்ட வணிகர் பரிவர்த்தனைகளில் சுமார் 4 சதவீதத்திற்கே பொருந்தும். எனவே, சுமார் 96 சதவீத P2M பரிவர்த்தனைகள் தொடர்ந்து கட்டணமின்றி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள், விவசாய இடுபொருட்கள் உள்ளிட்ட சில துறைகளில் ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதத்துக்கு பதிலாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 என்ற Flat MDR நடைமுறை இருக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், UPI பயன்படுத்தும் தனிநபர்களிடம் platform fee அல்லது மறைமுகக் கட்டணம் வசூலிக்க UPI செயலிகளுக்கு அனுமதி இல்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தனிநபர்களின் UPI பயன்பாடு தொடர்ந்து இலவசமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, “ரூ2,000-க்கு மேல் UPI பயன்படுத்தினால் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்” என்ற தகவல் சரியானது அல்ல. புதிய MDR என்பது குறிப்பிட்ட வணிகர்களுக்கிடையிலான கட்டண நடைமுறையாகும்; வாடிக்கையாளரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது விதிமுறைக்கு எதிரானதாகும்.

– நடுநிலை.காம்