தூத்துக்குடியில் தொடங்கியது ‘வெற்றிப் பயணம்’ ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார் – மாவட்டத்தில் 85 பேருந்துகள் இயக்கம்

TNSTC

தூத்துக்குடியில் தொடங்கியது ‘வெற்றிப் பயணம்’ ஆட்சியர் விஷு மகாஜன் தொடங்கி வைத்தார் – மாவட்டத்தில் 85 பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு முழுவதும் மகளிர் மற்றும் திருநங்கையருக்கான விரிவுபடுத்தப்பட்ட கட்டணமில்லா ‘வெற்றிப் பயணம்’ திட்டம் இன்று (அக்.2) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையொட்டி தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கலந்து கொண்டு வெற்றிப் பயண பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சென்னையில் மாநில அளவில் இத்திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்திலும் வெற்றிப் பயண சேவை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 85 பேருந்துகள் வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் தூத்துக்குடி பொது மேலாளர் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதன்படி,

தூத்துக்குடி நகரம் – 14 பேருந்துகள்
புறநகர் – 10 பேருந்துகள்
ஸ்ரீவைகுண்டம் – 11 பேருந்துகள்
கோவில்பட்டி – 18 பேருந்துகள்
விளாத்திகுளம் – 19 பேருந்துகள்
திருச்செந்தூர் – 7 பேருந்துகள்
சாத்தான்குளம் – 6 பேருந்துகள்

என மொத்தம் 85 பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

இதுவரை நடைமுறையில் இருந்த மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தில், மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் குறிப்பிட்ட சாதாரண பேருந்துகளில் குறிப்பிட்ட தூர வரம்புக்குள் மட்டுமே இலவசப் பயணம் வழங்கப்பட்டு வந்தது. எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் பல்வேறு புறநகர் பேருந்துகளில் இந்தச் சலுகை இல்லாத நிலை இருந்தது.

தற்போது ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், பெண்கள் வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக தொலைதூரப் பயணங்களையும் கட்டணமின்றி மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாநில அளவில் 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயக்கப்படும் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள், அதாவது 69 சதவீத பேருந்துகள், இத்திட்டத்தில் இயக்கப்பட உள்ளன. நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் விஷு மகாஜன், மகளிரின் பயணச் சுதந்திரம் அவர்களின் பொருளாதார சுதந்திரத்திற்கும், குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமையும் என்று தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்தின் எந்தப் பகுதியில் வசிக்கும் மகளிரும் போக்குவரத்துக் கட்டணம் காரணமாக கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள், பணியிடங்களுக்குச் செல்லும் பெண்கள், மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு இந்த விரிவாக்கம் பயனுள்ளதாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, சப்-கலெக்டர் விவேக் யாதவ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தூத்துக்குடி பொது மேலாளர் இராமகிருஷ்ணன், தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், கோட்ட மேலாளர் வேல்முருகன், நெல்லை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக உதவி மேலாளர் சண்முகம், தூத்துக்குடி நகர் கிளை மேலாளர் கார்த்திக், புறநகர் கிளை மேலாளர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டம், தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்று முதல் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது.