பெண்களின் இலவச பேருந்து பயணம் விரிவாக்கம்; ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
Tnstc News
சென்னை: தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று (அக்.2) சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று காலை நடைபெற்ற தொடக்க விழாவில், முதலமைச்சர் விஜய் பேருந்துகளுக்கு கொடியசைத்து சேவையைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேருந்தில் ஏறிய அவர், பெண் பயணிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டுகளை வழங்கினார். ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று பெண்களிடம் கலந்துரையாடியதுடன், அவர்களின் பயண அனுபவம் குறித்தும் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் விஜய் தங்களுடன் பேருந்தில் பயணம் செய்து, நேரடியாக டிக்கெட் வழங்கியதால் பெண் பயணிகள் உற்சாகம் அடைந்தனர். காலை 10 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சி சுமார் 10.30 மணியளவில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியின்போது தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் இருந்தனர்.
இதுவரை நகர சாதாரணப் பேருந்துகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சேவைகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணமில்லா பயண வசதி, தற்போது ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் மேலும் பல வகை பேருந்துகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாநகர மற்றும் நகர்ப்பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேல் இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் உள்ளிட்ட சேவைகளும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் உள்ள 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் இந்தத் திட்டத்தின் கீழ் இயக்கப்படுகின்றன. இது மொத்த பேருந்துகளில் சுமார் 69 சதவீதம் ஆகும். மேலும், தினசரி சுமார் 84.32 லட்சம் மகளிர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் மாணவிகள் தொலைதூரக் கல்லூரிகளுக்கும், பெண்கள் பணியிடங்களுக்கும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் வாய்ப்பு விரிவடையும் என அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி செலவாகும் என அரசு கணித்துள்ளது.
மொத்தத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்தை அதிக எண்ணிக்கையிலான பேருந்து சேவைகளுக்கு விரிவுபடுத்தும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
nadunilai.com