நேர்மை, எளிமை, மக்கள் சேவை – இன்றைய தலைமுறைக்கு காந்தியடிகளும் காமராஜரும் காட்டிய நல்வழிகள்
Gandhi - kamarajar
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை மற்றும் சத்தியாகிரகத்தை ஆயுதமாகக் கொண்டு மக்களை ஒன்றிணைத்த அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் நினைவுகூறப்படுகிறது. அதே நாளில், தமிழக அரசியலில் நேர்மை, எளிமை, நிர்வாகத் திறன் மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்காக பெரிதும் போற்றப்படும் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளும் அனுசரிக்கப்படுகிறது.
இந்த இரு தலைவர்களின் வாழ்க்கைப் பாதைகள் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தது, எளிமையான வாழ்க்கை வாழ்ந்தது, பதவியை தனிப்பட்ட செல்வாக்கிற்காக பயன்படுத்தாமல் மக்கள் நலனுக்காக செயல்பட்டது போன்ற பல பொதுவான பண்புகள் அவர்களிடம் காணப்பட்டன.
1869-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி குஜராத்தின் போர்பந்தரில் பிறந்த காந்தியடிகள், இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராக உருவெடுத்தார். அகிம்சை, சத்தியாகிரகம், உண்மை, எளிமை ஆகியவற்றை தனது அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்களின் அடிப்படையாகக் கொண்டார். தென்னாப்பிரிக்காவில் இனப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் தொடங்கிய அவரது பொதுவாழ்க்கை, பின்னர் இந்திய விடுதலை இயக்கத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் மூலம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்தார். “உண்மை மற்றும் அகிம்சை வழியில் போராடினாலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்பதை தனது வாழ்க்கையின் மூலம் காந்தியடிகள் எடுத்துக்காட்டினார்.
1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி விருதுநகரில் பிறந்த காமராஜர், தமிழக அரசியலில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றவர். 1954 முதல் 1963 வரை சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தார். பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைக்கச் செய்தல், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துதல், நீர்ப்பாசனம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் அவரது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. அவரது ஆட்சிக்காலத்தில் மணிமுத்தாறு, வைகை, சாத்தனூர் உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
பதவியில் இருந்தபோதும் எளிமையான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தது, தனிப்பட்ட சொத்து சேர்ப்பதில் ஆர்வம் காட்டாதது, கட்சி மற்றும் ஆட்சிப் பணிகளில் ஒழுக்கத்தை வலியுறுத்தியது போன்ற காரணங்களால் அவர் “பெருந்தலைவர்” என்றும் “கர்மவீரர்” என்றும் அழைக்கப்பட்டார்.
காந்தியடிகளும் காமராஜரும் வெவ்வேறு காலகட்டங்களில் செயல்பட்டவர்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை, இன்றைய தலைமுறைக்கு சில முக்கியமான செய்திகளை வழங்குகிறது. அதிகாரம் என்பது தனிப்பட்ட வாழ்க்கையை உயர்த்துவதற்கான கருவி அல்ல; மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான பொறுப்பு. பதவி நிரந்தரமானது அல்ல; ஆனால் நாம் செய்யும் மக்கள் சேவை நீண்ட காலம் நினைவில் நிற்கும். உண்மை, நேர்மை, எளிமை, தன்னலமற்ற சேவை ஆகியவை அரசியலிலும் பொதுவாழ்விலும் முக்கியமான அடிப்படை பண்புகள். பகவத்கீதையும், ராமாயணமும், மகாபாரதமும் இவர்களின் வழிகாட்டிகளாகும்.
இன்றைய காந்தி பிறந்த நாளிலும், காமராஜர் நினைவு நாளிலும், அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அவர்கள் காட்டிய நேர்மை, எளிமை, அகிம்சை, கல்வி, மக்கள் நலன் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகிய நல்வழிகளில் நம்மால் முடிந்த அளவு நடைபோடுவதே அவர்களுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக அமையும்.
nadunilai.com