திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு பதவியேற்பு நிகழ்ச்சி - செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படாதது ஏன்?

Thiruchendur Murugan

திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு பதவியேற்பு நிகழ்ச்சி -  செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படாதது ஏன்?

திருச்செந்தூர், செப்.25:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இந்த நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த அருள்முருகன், தற்போதைய தவெக ஆட்சியிலும் மீண்டும் அறங்காவலர் குழுத் தலைவராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அறங்காவலர் குழுவில் உறுப்பினர்கள் சிலர் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கோவில் அறங்காவலர் குழுவிலும் மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தற்போதைய நிலையில் தலைவர் மீண்டும் தொடர்வது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், புதிய அறங்காவலர் குழுவில் தற்போதைய ஆட்சியுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறப்படும் அரசியல் பின்னணி கொண்டவர்கள் இடம்பெற்றுள்ளார்களா என்ற கேள்வியும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களின் தேர்வு மற்றும் பதவியேற்பு போன்ற முக்கியமான நிகழ்ச்சி நடைபெற்றபோதும், செய்தியாளர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கோவில் நிர்வாகத்தின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் ஊடகங்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக தமிழகத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றபோதும், விமானப் பகுதி உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளுக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும், கோவில் நிர்வாகம் வழங்கிய புகைப்படங்களையே செய்திகளுக்கு பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

நிர்வாகம் வழங்கிய சில புகைப்படங்கள் செய்தி வெளியீட்டிற்கு ஏற்ற வகையில் இல்லாததால், நிகழ்வை நேரடியாக பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த நிலை தற்போது அறங்காவலர் குழு பதவியேற்பு நிகழ்ச்சியிலும் தொடர்வதாக செய்தியாளர்கள் மத்தியில் ஆதங்கம் நிலவுகிறது.

திமுக ஆட்சிக்கு மாற்றாக புதிய அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், திருச்செந்தூர் கோவில் நிர்வாக விவகாரத்தில் செய்தியாளர்களுக்கு தகவல்கள் முழுமையாக வழங்கப்படாதது ஏன் என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அறங்காவலர் குழுத் தலைவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? புதிய உறுப்பினர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? தேர்வு நடைமுறை எவ்வாறு நடைபெற்றது? பதவியேற்பு நிகழ்ச்சி குறித்து ஊடகங்களுக்கு ஏன் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு கோவில் நிர்வாகமும், சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையும் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் செய்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

முக்கியமாக, திருச்செந்தூர் கோவில் போன்ற முக்கியமான திருத்தலத்தின் நிர்வாக நடவடிக்கைகள் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.