சாயர்புரம் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க முதல்வர், போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு கோரிக்கை

Tnstc news

சாயர்புரம் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க முதல்வர், போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு கோரிக்கை

சாயர்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும், புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகளை தொடங்க வேண்டும், ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

சாயர்புரம், கூட்டாம்புளி,  ஸ்ரீவைகுண்டம், ஏரல், புதுக்கோட்டை, ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், நாசரேத், சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினசரி சென்று வருகின்றனர். இதனால், இந்த பகுதிகளுக்கு இடையிலான பேருந்து இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்நிலையில், நீண்ட காலமாக இயக்கப்பட்டு வந்த சில பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும், சில வழித்தடங்களில் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததாலும் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்த தடம் எண் 153 XS1 பேருந்து, ஸ்ரீவைகுண்டம் – சாயர்புரம் – தூத்துக்குடி – மதுரை இடையே 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. வெளியூர்களுக்கு வணிகம் உள்ளிட்ட பணிகளுக்காகச் சென்று நள்ளிரவு நேரத்தில் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் ஸ்ரீவைகுண்டம், சிவகளை, சாயர்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இந்த பேருந்து பெரிதும் உதவியாக இருந்ததாகவும், தற்போது சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் சிரமப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 153 XS1 பேருந்தை மீண்டும் ஸ்ரீவைகுண்டம் – சாயர்புரம் – தூத்துக்குடி – மதுரை இடையே இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திசையன்விளை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்த தடம் எண் 145 SSS பேருந்து, உவரி – திசையன்விளை – சாத்தான்குளம் – நாசரேத் – குரும்பூர் – ஏரல் – சாயர்புரம் – தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அந்த சேவை செயல்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு பழைய வழித்தடத்திலோ அல்லது உவரி – உடன்குடி – செட்டியாபத்து – மெஞ்ஞானபுரம் – நாசரேத் – ஏரல் – சாயர்புரம் – தூத்துக்குடி வழித்தடத்திலோ பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் தடம் எண் 578 பேருந்தை தூத்துக்குடி – சாயர்புரம் – ஸ்ரீவைகுண்டம் – திருநெல்வேலி – நாகர்கோவில் இடையே பொதுமக்களுக்கு முழுமையாக பயன்படும் வகையில் முறையாக இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு சாயர்புரம் – தூத்துக்குடி – இராமநாதபுரம் வழியாக இராமேஸ்வரம் சென்று திரும்பும் வகையில் புதிய பேருந்து சேவையை தொடங்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி வரை இயக்கப்பட்ட பேருந்து தற்போது மதுரை வரை நீட்டிக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும், இதனால் அந்த பேருந்து முன்கூட்டியே புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், அதிகாலை 5.30 மணியளவில் பேருந்தை எதிர்பார்த்து பயணம் செய்யும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த நேரத்தை கருத்தில் கொண்டு ஸ்ரீவைகுண்டம் – சாயர்புரம் – தூத்துக்குடி – இராமநாதபுரம் – இராமேஸ்வரம் இடையே புதிய பேருந்து சேவை தொடங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஓட்டப்பிடாரம் மற்றும் சாயர்புரம் பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டி – ஓட்டப்பிடாரம் – புதியம்புத்தூர் – புதுக்கோட்டை – சாயர்புரம் – ஏரல் – திருச்செந்தூர் – உவரி – திசையன்விளை இடையே இயக்கப்பட்ட தடம் எண் N.349 பேருந்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவை மூலம் சாயர்புரம் பகுதியில் உள்ள கல்லூரிகளில் பயிலும் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பயனடைந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, N.349 பேருந்தை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சாத்தான்குளம், ஏரல் அல்லது ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து சாயர்புரம், தூத்துக்குடி வழியாக திருப்பூருக்கும், விளாத்திகுளத்திற்கும், பழனி, பொள்ளாச்சி வழியாக கோயம்புத்தூருக்கும்  செல்லும் வகையில் புதிய பேருந்து சேவைகளை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடங்கள் செயல்படுத்தப்பட்டால் தென் மாவட்டங்களில் இருந்து தொழில் நகரங்களுக்கும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையங்களுக்கும் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நேரடி அல்லது மேம்பட்ட போக்குவரத்து இணைப்பு கிடைக்கும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

சாயர்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பேருந்து என்பது பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், சந்தைகள் மற்றும் வேலைவாய்ப்பு பகுதிகளை இணைக்கும் அத்தியாவசிய பொதுப் போக்குவரத்து வசதியாக உள்ளது. குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் போதுமான பேருந்து வசதி இல்லாதது மருத்துவப் பணியாளர்கள், மாணவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பயணிகளின் எண்ணிக்கை, மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் தேவைகள், மருத்துவம் மற்றும் வணிகப் போக்குவரத்து தேவைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, நிறுத்தப்பட்ட சேவைகளை மீண்டும் இயக்குவதுடன், தேவையான புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேற்கண்ட கோரிக்கைகளை பொதுமக்களின் நலன் கருதி பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.