பட்டப்பகலில் ஆடு திருடும் கும்பல் அட்டகாசம் – அச்சத்தில் புதுக்கோட்டை பகுதி விவசாயிகள்
Theft News
தூத்துக்குடி, செப்.28:
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை, கூட்டாம்புளி, போடம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டப்பகலிலேயே ஆடுகளை திருடிச் செல்லும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அச்சத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை ஆதாரமாகக் கொண்டு விவசாயம் முக்கிய தொழிலாக நடைபெற்று வருகிறது. விவசாயப் பணியுடன் கூடுதல் வருமானத்திற்காக பலர் வீடுகளில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் திருடப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக புதுக்கோட்டை, கூட்டாம்புளி, போடம்மாள்புரம் பகுதிகளிலும், பேய்குளம், பொட்டல்குளம் உள்ளிட்ட குளங்களிலும் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் திருடப்படுவதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் சாலையோரங்களில் ஆடுகள் படுத்திருப்பதை நோட்டமிடும் மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிள்கள் அல்லது சிறிய கார்களில் வந்து திடீரென ஆடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்றிச் செல்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
சில நேரங்களில் ஆடுகளை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் சம்பவங்கள் பொதுமக்களின் கவனத்திற்கு வரும் முன்னரே, திருட்டுக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. இரவு நேரங்களிலும் வீட்டின் வெளியே பாதுகாப்பாக கட்டி வைக்கப்பட்டிருக்கும் ஆடுகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்போர் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆடுகள் திருட்டு தொடர்பாக புதுக்கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. திருட்டுச் சம்பவங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள், அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து, கும்பலை கண்டறிய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையே போதிய மழை பெய்யாததால் பல இடங்களில் ஆறு, குளங்களில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற கவலையில் இருக்கும் நிலையில், விவசாயிகளின் கூடுதல் வருமானத்திற்கான ஆதாரமாக விளங்கும் கால்நடைகளும் திருடப்படுவது அவர்களை மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளுவதாக கூறப்படுகிறது.
விவசாயக் குடும்பங்களுக்கு ஒரு ஆடு அல்லது மாடு என்பது வெறும் கால்நடை மட்டுமல்ல; அவசர காலங்களில் குடும்பத்திற்கு கைகொடுக்கும் சேமிப்பாகவும் இருந்து வருகிறது. எனவே, கால்நடை திருட்டு அவர்களின் குடும்ப பொருளாதாரத்தையும் நேரடியாக பாதிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பட்டப்பகலிலேயே கால்நடைகள் திருடப்படும் சம்பவங்கள் பொதுமக்களின் கவனத்திற்கு வரும்போது, குற்றவாளிகளை பிடிக்க முயலும் நிலையில் நேரடி மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும் அபாயமும் உள்ளது.
எனவே பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்காமல், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து கால்நடை திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், முக்கிய சாலைகள் மற்றும் கால்நடைகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை அதிகரிப்பதுடன், இரவு நேர ரோந்து மற்றும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை கண்காணிக்கும் பணியையும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விவசாயத்தை காப்பாற்ற போராடும் நிலையில், கால்நடைகளையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதால், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த தொடர் திருட்டு சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
nadunilai.com