தமிழக அரசியலில் அதிகரிக்கும் தனிநபர் விமர்சனங்கள் - தவிர்க்க வேண்டும் என நடுநிலையாளர்கள் கோரிக்கை
political
தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுவெளியில் பயன்படுத்தும் வார்த்தைகள் சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கொள்கை, மக்கள் நலத் திட்டங்கள், ஆட்சியின் செயல்பாடுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டிய அரசியல் விவாதங்கள், தனிநபர் விமர்சனங்களாகவும் வார்த்தைப் போராகவும் மாறுவது குறித்து சமூக ஆர்வலர்களும் நடுநிலையாளர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசியலில் காங்கிரஸ் தலைவர் காமராஜர், திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அரசியல் காலத்தில் கடுமையான விமர்சனங்கள் இருந்துள்ளன. ஆட்சியின் செயல்பாடுகள், கட்சிகளின் கொள்கைகள், தலைவர்களின் அரசியல் முடிவுகள் ஆகியவற்றை முன்வைத்து நடந்த அந்த விமர்சனங்கள் தமிழக அரசியலின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளன.
தற்போதைய அரசியல் சூழலிலும் இந்தப் போக்கு தொடர்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையிலான அரசியல் விமர்சனங்கள் ஒருபுறம் தொடர்கின்றன. மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திமுகவை விமர்சிப்பதும், திமுக துணைப் பொதுச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விஜய் மற்றும் தவெகவை விமர்சிப்பதும் அரசியல் விவாதங்களில் கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக, ’’ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி’’ என்று விஜய் பேசுவதும், அதற்குப் பதிலளிக்கும் வகையில், “ஓம் காளி, ஜெய் காளி; தவெக ஒரு ஓடுகாலி” என்று உதயநிதி ஸ்டாலின் பேசுவதுமான வார்த்தைப் போர் விவாதத்தை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளன.
ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்பதும், எதிர்க்கட்சிகளின் கொள்கைகளை விமர்சிப்பதும் அரசியல் கட்சிகளின் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். மக்கள் நலத் திட்டங்களில் உள்ள குறைகள், தேர்தல் வாக்குறுதிகளின் நிலை, ஊழல் குற்றச்சாட்டுகள், வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அரசியல் தலைவர்கள் கடுமையான கேள்விகளை எழுப்புவதில் தவறில்லை. ஆனால், கொள்கைகளை விமர்சிப்பதற்கும் தனிநபர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதற்கும் வேறுபாடு உள்ளது. அரசியல் எதிரிகளை அவமானப்படுத்தும் சொற்கள், கேலி முழக்கங்கள், தரக்குறைவான அடைமொழிகள் ஆகியவை அரசியல் விவாதத்தின் முக்கியத்துவத்தைத் திசைதிருப்பும் அபாயம் உள்ளது.
ஒரு கட்சி மற்றொரு கட்சியின் கொள்கையை எதிர்க்கலாம். அதன் தேர்தல் வாக்குறுதிகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளில் குறைகள் இருந்தால் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டலாம். ஆனால், எதிர் திசையில் உள்ளவர்கள் என்பதற்காகவே ஒருவரை இழிவுபடுத்தும் அணுகுமுறை அவசியம்தானா என்பதே இப்போது எழும் கேள்வியாக உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் அரசியல் கூட்டங்கள், தொலைக்காட்சி விவாதங்கள், யூடியூப் காணொளிகள், சமூக வலைதளப் பதிவுகள் ஆகியவற்றின் மூலம் அரசியல் தலைவர்களின் பேச்சுகளைத் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் சொற்களும், எதிர்ப்புக் கருத்துகளை வெளிப்படுத்தும் முறைகளும் இளைஞர்களின் அரசியல் உரையாடல்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காகக் கேலி செய்வதும், இழிவான சொற்களைப் பயன்படுத்துவதும் இயல்பானது என்ற எண்ணம் உருவாகாமல் இருப்பது அவசியம்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாகரிகமாக விவாதிப்பது, எதிர்க்கருத்துகளுக்குச் செவிசாய்ப்பது, ஆதாரங்களுடன் பேசுவது, தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது தனிநபர் மரியாதையைக் காப்பது போன்ற பண்புகள் ஜனநாயகத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு உதவுகின்றன. அரசியல் தலைவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அனைவராலும் பின்பற்றப்படும் என்று கூற முடியாது. இருப்பினும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் தலைவர்களின் பேச்சுகள் சமூகத்தில் விவாதப் பொருளாக மாறுவதால், அவர்கள் பயன்படுத்தும் மொழியில் கூடுதல் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே சமூக அக்கறையுள்ளவர்களின் கருத்தாக உள்ளது.
அரசு நிர்வாகத்திலும் அரசியல் கட்சிகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகிப்பவர்கள் மக்களுக்கு வழிகாட்டும் இடத்தில் இருக்கிறார்கள். எனவே, அவர்களின் பேச்சு அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன் நின்றுவிடாமல், சமூகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும் ஊக்குவிக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு இடையே போட்டி இருப்பது இயல்பானது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் கட்சிகள் தங்களின் கொள்கைகளையும் சாதனைகளையும் எடுத்துரைக்கலாம். எதிர்க்கட்சிகளின் குறைகளை மக்களிடம் கொண்டு செல்லலாம். ஆனால், இத்தகைய போட்டியில் தனிநபர் தாக்குதல்களும் தரக்குறைவான வார்த்தைகளும் முக்கிய இடத்தைப் பிடிக்கும்போது, மக்கள் எதிர்பார்க்கும் அடிப்படைப் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு தலைவரின் அரசியல் வலிமை அவர் பயன்படுத்தும் கடுமையான வார்த்தைகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. அவர் முன்வைக்கும் கருத்துகளின் தெளிவு, ஆதாரங்களுடன் பேசும் திறன், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வைக்கும் வழிமுறைகள் ஆகியவையும் அரசியல் விவாதத்தில் முக்கியமானவை.
இதுகுறித்து சமூக ஆர்வலர்களும் நடுநிலையாளர்களும் வலியுறுத்துவது என்னவென்றால், அரசியல் விமர்சனங்கள் இருக்கட்டும்; அவை கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மையமாகக் கொண்டிருக்கட்டும் என்பதுதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது பேச்சுகளின் சமூகத் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும்போதும் உண்மைகள், ஆதாரங்கள், நாகரிகமான சொற்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அரசியலில் கருத்து மோதல்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால், அந்த மோதல்கள் தனிநபர் விரோதங்களாக மாற வேண்டிய அவசியமில்லை. எதிர்க்கட்சியை விமர்சிப்பது ஜனநாயக உரிமை; அதே நேரத்தில் எதிர்க்கட்சியினரின் மரியாதையையும் கருத்துரிமையையும் மதிப்பதும் ஜனநாயகப் பண்பாகும்.
அரசியல் தலைவர்கள் பேசும் வார்த்தைகள் மக்களைப் பிரிப்பதற்காக அல்ல; மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விவாதத்தை உருவாக்குவதற்காக இருக்க வேண்டும். அரசியல் மேடைகளில் தலைவர்கள் பயன்படுத்தும் மொழி, அடுத்த தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் பண்பாட்டுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
nadunilai.com