தூத்துக்குடியில் பிப்.27ல் கல்விக் கடன் முகாம் – மாணவர்கள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

Thoothukudi collector

தூத்துக்குடியில் பிப்.27ல் கல்விக் கடன் முகாம் – மாணவர்கள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தூத்துக்குடி, பிப்.25:

தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டண சுமையால் பாதிக்கப்படாமல் தங்கள் கல்வியைத் தொடர்ந்து முன்னேறுவதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் வங்கிகளுடன் இணைந்து கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வருகின்ற 27.02.2026 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்விக் கடன் முகாம் நடைபெறும். 2024–2025 கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை மற்றும் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்கள், மேலும் ஏற்கனவே கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தேவையான ஆவணங்கள்:

மாணவர்கள் கொண்டு வர வேண்டியவை:

பான் கார்டு
ஆதார் அட்டை
வங்கி கணக்கு பாஸ் புத்தகம்
சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
10ஆம் வகுப்பு, +1, +2 மதிப்பெண் சான்றிதழ்கள்
மாற்றுச் சான்றிதழ் (TC)
சாதி சான்றிதழ்
முதல் பட்டதாரி சான்றிதழ் (தேவையுள்ளவர்களுக்கு)
உறுதிமொழி சான்றிதழ் (Bonafide Certificate)
கல்லூரி கட்டண விவரம் மற்றும் கட்டண ரசீது

இணை விண்ணப்பதாரராக (பெற்றோர்) வருவோர் கொண்டு வர வேண்டியவை:

பான் கார்டு
ஆதார் அட்டை
புகைப்படம்
வங்கி கணக்கு பாஸ் புத்தகம்
வருமானச் சான்றிதழ்

மேலும், மாணவர்கள் கல்விக் கடனுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை PM Vidyalaxmi Portal இணையதளம் (https://pmvidyalaxmi.co.in/ ) மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வழங்கப்படும் செலவுகள்: 

மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கீழ்க்கண்ட கல்விச் செலவுகளுக்காக கடன் பெறலாம்:

கற்பிப்பு கட்டணம்
சிறப்பு கட்டணம்
விடுதி கட்டணம்
புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள்
பேருந்து/பயணச் செலவு

இந்த முகாமில் பல தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்று, மாணவர்களின் விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து, தகுதி பெற்றவர்களுக்கு கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்விக்கான கனவை நனவாக்கும் வகையில் இந்த கல்விக் கடன் முகாம் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும். பொருளாதார காரணங்களால் கல்வி தடைபடாத வகையில் அனைத்து தகுதி மாணவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.