திருச்செந்தூர் யானை தாக்கி உயிரிழந்த பாகன் மனைவிக்கு அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
Tiruchendur murugan
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உதவி யானை மாவுத்தராக பணிபுரிந்தவர் ச.உதயகுமார். இவரும், இவரது உறவினர் சிசுபாலன் என்பவரும் கடந்த 18.11.2024 அன்று திருக்கோயில் யானை தெய்வானை தாக்கியதில் உயிரிழந்தனர். உடனே தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. அப்போது உதயகுமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். அதன்படி உதயக்குமாரின் வாரிசுதாரரான மனைவி ஆர்.ஆர்.ரம்யாவிற்கு திருக்கோயிலில் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை இன்று வழங்கப்பட்டது.
மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் ரம்யாவை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கினர். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.