எதிரிகளை வீழ்த்தும் முருகனைச் சரணடைந்த ஓ.பி.எஸ் – திருச்செந்தூரில் அரசியல் திருப்பமா?
OPS News
மனிதனால் முடியாத காரியங்களை கடவுள் மட்டுமே நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து, பலமுறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் முக்கிய தூண்களில் ஒருவராக இருந்த அவர், காலப்போக்கில் கட்சியின் முக்கிய பதவிகளை இழந்து, தற்போது அரசியல் ரீதியாக கடினமான சூழலில் இருந்து வருகிறார். தர்மயுத்தம், சட்டப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் முயற்சிகளுக்குப் பிறகும், அவருக்கு சாதகமான தீர்வு கிடைக்காத நிலையில், ஆன்மீக நம்பிக்கையை நாடியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று மாலை தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்த ஓ.பன்னீர்செல்வத்தை, தூத்துக்குடியைச் சேர்ந்த ஏசாதுரை உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல், நேரடியாக திருச்செந்தூர் புறப்பட்டுச் சென்றார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் சண்முகர், வள்ளி, தெய்வானை, தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பிறகு கோயில் வாசலில் உள்ள பிரபல டீக்கடையில் டீ அருந்திய அவர், பின்னர் விருந்தினர் மாளிகை நோக்கி சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “உலக மக்கள் நலனிற்காகவே வேண்டிக் கொண்டேன். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று ஏற்கனவே கூறியிருந்தேன். தை மாதம் முடிய இன்னும் 10 நாட்கள் இருக்கிறது” என்று கூறினார்.
பின்னர் அவர் திருச்செந்தூரில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்கியுள்ளார். அவரது வருகையையடுத்து, கோயில் வளாகத்தில் ஆதரவாளர்கள் திரளாக குவிந்தனர். திருச்செந்தூர் முருகப்பெருமானின் கருணையால் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அரசியல் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வேண்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
நாளை காலை 11 மணியளவில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடையில் சத்ரு சம்ஹார பூஜை நடத்தப்படலாம் என ஆதரவாளர்கள் தரப்பில் பேசப்பட்டாலும், அதை அவரது தரப்பு மறுத்து வருகிறது. எனவே, அந்த பூஜை நடைபெறுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதி இல்லை.
அதிமுக அரசியலில் முக்கியமான திருப்பங்கள் நடைபெற்று வரும் சூழலில், ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த திருச்செந்தூர் பயணம், ஆன்மீக நம்பிக்கையைத் தாண்டி அரசியல் ரீதியான புதிய சமிக்ஞையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து, தமிழக அரசியல் வட்டாரங்கள் கவனத்துடன் நோக்கி வருகின்றன.
nadunilai.com