நாலுமாவடியில் ஜன.22, 23ம் தேதிகளில் ரெடீமர்ஸ் மாநில மின்னொளி கபடி போட்டி - மோகன் சி லாசரஸ் அழைப்பு
Nalumavadi News
குரும்பூர், ஜன.18- நாலுமாவடியில் கல்லூரிகளுக்கிடையேயான மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி ஜன.22 மற்றும் 23ம் தேதிகளில் நடக்கிறது. போட்டிகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தொடங்கி வைக்கிறார்.
குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டு துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 8ம் ஆண்டு "ரெடீமர்ஸ்" கோப்பைக்கான மாநில அளவிலான தமிழர் திருநாள் மின்னொளி கபடி போட்டி ஜன.22 மற்றும் 23ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாலை 5.30 மணியளவில் துவங்குகிறது. போட்டிகளில் தமிழகத்தின் தலைச்சிறந்த கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன. சர்வதேச தரத்திலான "மேட்" தளத்தில் நடக்கும் இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். முதல் நாள் போட்டியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் துவங்கி வைக்கிறார்.
போட்டியில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், 2ம் பரிசாக ரூ.30 ஆயிரமும், 3 மற்றும் 4ம் பரிசாக தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்படுகிறது. சிறந்த ஆட்டக்காரர்களுக்கு 6 சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 35 பார்வையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார், ஊழிய விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.