சர்வதேச விமானநிலையமாக உருவாகி வருகிறது தூத்துக்குடி விமான நிலையம்.!
Thoothukudi airport
ஒரு காலத்தில் வடக்கு நோக்கி சென்றால் வளரலாம் என்பார்கள். ஆம், தொழில், வேலைவாய்ப்புகள் இயற்கையாகவே வடக்கு பகுதியில் கிடைத்தது உண்மைதான். அதுக்காக தெற்கே இல்லைவே இல்லை என்று சொல்லவில்லை. வடக்கு நோக்கும் தூரம் அதிகமாகும். தெற்கே கடலோடு முடிகிறது. கடல் தாண்டிய வர்த்தகம் நடைபெற்ற காலத்தில் தெற்கே துறைமுகங்கள் உலகம் பேசும் அளவிற்கு இருந்தது. காலப்போக்கில் அது மாறியது. அதன் பின்னர்தான் வடக்கு வாழ்கிறது என்கிற எண்ணம், இப்படி நம்மையெல்லாம் வடக்கு நோக்கி செல்ல தூண்டியது.
ஆனால் இப்போது அனைத்துமான வடக்கிற்கும் சேர்த்து தொழில், வேலைவாய்ப்பு ஆதாரங்களாக உருவெடுத்து வருகிறது தெற்கு. சர்வதேச அளவிலான தொலை தொடர்பிற்கு சென்னை, மும்பை,கல்கத்தா மற்றும் பெங்களூரு என்கிற நிலையில் இப்போது அந்த லிஸ்டில் தூத்துக்குடியும் சேர்ந்து வருகிறது. மக்களின் பொருளாதாரம், நாட்டின் காப்பர் உற்பத்திக்கு உத்தரவாதத்தை வழங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்டிருக்கிறது. இதனால் பொருளாதார பின்னடைவு ஏற்படும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் பல தொழில்கள் உருவாகி வருகிறது. 16 ஆயிரம் மதிப்பீட்டில் வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி ஆலை, அக்மி, செம்கார்ப்,உம்வெல்ட் மற்றும் லீப் கிரீன் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் ஹைட்ரஜன் உற்பத்திக்கான ஆலைகளை இப்பகுதியில் அமைக்க உள்ளன. இவைமட்டுமில்லை, குலசேகரன்பட்டினத்தில் நாட்டில் இரண்டாவது ஏவுதளத்தை இஸ்ரோ உருவாக்கி வருகிறது.
இப்படியாக தூத்துக்குடி மாவட்டம் தொழில் வளத்தில் முன்னேறும் வாய்ப்பை பெறவுள்ளது. இதற்கான கட்டமைப்பில் ஒன்றுதான் விமானநிலையம். எனவே தூத்துக்குடி விமானநிலையத்தை உலக அளவிலான விமானங்கள் வந்து செல்லும் அளவிற்கு விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் விரிவு படுத்துவதற்காக சுமார் 381 கோடியை மத்தியரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்துக்கு தேவையான சுமார் 106 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி கொடுத்திருக்கிறது. விரிவாக்கப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் மாதம் பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு ஏர்பஸ் 321 போன்ற பெரிய விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையமாக உயர்ந்துவிடும். அதனைத் தொடர்ந்து சர்வதேச விமானங்களும் இங்கு வந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.