பக்தர்களை பாடாய் படுத்துகிறதா தமிழக, கேரள அரசுகள் ?

indu news

பக்தர்களை பாடாய் படுத்துகிறதா தமிழக, கேரள அரசுகள் ?

கார்த்திகை,மார்கழி,தை மாதங்களில் தமிழகம்,கேரள, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்து கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். விரதமிருந்து கோயில்களுக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்றும் கந்தனுக்கு ஹரோகரா என்றும் உணர்ச்சி பொங்க பக்தி பரவசம் கொள்வது வழக்கம். இப்படி பக்தர்கள் மத்தியில் பக்தி வாசனை அடித்துக் கொண்டிருக்கிற அதேவேளையில், அரசுகளின் நிர்வாக கெடுபிடி மற்றும் விதிமுறைகளினால் பக்தர்கள் விரக்தியடைந்துள்ளதை பார்க்க முடிகிறது. 

வெகுதூரத்தில் இருந்து வரும் பாதையாத்திரிகள் கடவுள் சந்நிதானம் அருகில் வந்ததும் உச்சநிலை பக்தி பரவசம் அடைவர். அப்போது அவர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் அருகில் மேள தாளங்கள் இசைக்கப்படும். அப்படித்தான் பழனி முருகன் கோயிலிலும் மேளதாளங்கள் இசைக்கப்படுகின்றன. அப்படி இசைக்கப்படும் இசைக்கு தடை போட்டிருக்கிறது அறநிலையத்துறை. அதாவது பக்தர்கள் கோயில் எல்லைக்குள் வரும்போது அவர்களுடன் மேளக்காரர்கள் யாரையும் அழைத்து வரகூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த இசைகள் முறையான இசையாக இல்லை என்று மேலோட்டமாக காரணங்கள் கூறினாலும், நடவடிக்கைக்கு அதுதான் காரணம் என்று இன்னும் விவரிக்கப்படவில்லை என்றே தெரிகிறது. 

இது குறித்து  இசைக்கலைஞர்கள் அதிகாரியிடம் கேட்ட போது அவர் கூறும் காரணங்கள் இசைக்கலைஞர்களுக்கு திருப்தியாக இல்லை என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே இந்து மத கோயில் விவகாரத்தில் தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கும் இந்து மத மக்களுக்கும் இடையே முட்டல் மோதல் இருந்து வரும் நிலையில் இந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதுக்கிடையே தமிழத்தில் இருந்து கேரளாவில் உள்ள சபரி மலைக்கு சென்ற பக்தர்கள் பலர் அங்குள்ள குளறுபடிகாரணமாக இடையில் திரும்பியதாக கூறுகின்றனர். கேரளாவை புதிய வகை வைரஸ் மிரட்டி வரும் நிலையில் சபரி மலையில் பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்கான கால நேரங்கள் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிக அளவில் கூட்டத்தில் சிக்கித்தவிக்கும் நிலை ஏற்பட்டது. கோயில் நிர்வாகம் திணறிய நிலையில் பல பக்தர்கள் சாமியை தரிசிக்க முடியாமல் வெளியேறியிருப்பதாக கூறுகிறார்கள். 

அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது கேரளாவில் உள்ள கோயில் நிர்வாகத்தின் கடமை. ஆனால் அவர்கள் அதை செய்ய தவிறிவிட்டனர். அதுபோல் பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் மேளம் அடிக்க கூடாது என்கிற உத்தரவு அவசியமற்றது. இந்த விவகாரங்களால் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். கேரள அரசும், தமிழக அரசும் இந்த விவகாரத்தில் பக்தர்களை பாடாய் படுத்துகிறது என்றுதான் எடுத்துக் கொள்ள முடிகிறது.