திருச்செந்தூர் - மதுரை இடையே புதிய பேருந்துகள் சேவை - அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
Minister news
தமிழக மக்களின் போக்குவரத்து தேவைக்காக புதிய பேருந்துகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சமீபகாலமாக அவ்வப்போது நடந்து வருகிறது. இதில் வழித்தடத்தில் இயக்கப்படும் பழைய பேருந்துகளை அகற்றி விட்டு அந்த வழித்தடத்தில் புதிய பேருந்துகளை இயக்குவது அதிகம் உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இன்று(31.08.2024) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 புதிய பேருந்துகளின் சேவையை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
அப்போது அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், ’’தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக தூத்துக்குடி மண்டலத்தில் 07 பணிமனைகள் மூலமாக 286 பேருந்துகள் இயக்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது. இதில் நாளொன்றுக்கு 183 புறநகர் பேருந்துகள், 103 நகரப்புற பேருந்துகள் மூலமாக 1,48,000 கி.மீ இயக்கப்பட்டு சுமார் 3,97,342 பயணிகள் பயனடைந்து வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிதாக 34 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 32 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்றையதினம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 புதிய பேருந்துகளின் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்துகளானது, திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை வழித்தடத்திற்கு காலை 7.50 மணிக்கு ஒரு பேருந்தும், காலை 10.30 மணிக்கு மற்றொரு பேருந்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நகர மன்றத் தலைவர் சிவஆனந்தி, காயல்பட்டிணம் நகர மன்றத் தலைவர் கே.ஏ.எஸ்.முத்து முஹம்மது ஆலிம், திருச்செந்தூர் நகர மன்ற துணைத் தலைவர் ஏ.பி.ரமேஷ், தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் பி.பாலசுப்பிரமணியன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் கண்மணி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், கிளைமேலாளர் ராஜசேகரன், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.