பயப்படாதிருங்கள்! உங்களுக்காக மரித்தவர், உயிரோடிருக்கிறார் - சகோ. மோகன் சி லாசரஸ்

Nalumavadi News

பயப்படாதிருங்கள்! உங்களுக்காக மரித்தவர், உயிரோடிருக்கிறார் - சகோ. மோகன் சி லாசரஸ்

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் சகோ. மோகன் சி லாசரஸ், ஈஸ்டர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். 

உங்களுக்காக ஒருவர் மரித்தார்... உங்கள் இடத்தில் ஒருவர் மரித்தார்... உங்கள் பயத்தை மாற்ற ஒருவர் மரித்தார்... உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்ற ஒருவர் மரித்தார்... உங்கள் பாவங்கள், சாபங்கள், தோஷங்களை நீக்க, ஒருவர் மரித்தார்!நம்முடைய பாவங்கள், சாபங்கள், தோஷங்கள் நீங்க, பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்பதை நம்புகிறோம். பரிகாரியாக ஒருவர் வந்தார். ‘இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது.’ என்பது, வேதங்கள் சொல்லும் சத்தியம். சாபத்திற்கும், தோஷத்திற்கும் காரணமாக இருக்கிற பாவங்களை போக்க பரிகாரமாக இரத்தம் சிந்தப்பட வேண்டும்.

மிருகங்களின் இரத்தம், பறவைகளின் இரத்தம், மனிதனுடைய பாவங்களை போக்க முடியாது. அதற்கு, ஒரு பரிசுத்த மனிதனுடைய குற்றமற்ற பரிசுத்தமுள்ள இரத்தம் சிந்தப்பட வேண்டும். பாவமே செய்யாத குற்றமற்ற மனிதன் இந்த உலகில் இல்லை!

ஆகவே, நம்மை உண்டாக்கிய கடவுளே ஒரு மனிதனாக இந்த உலகில் அவதரித்தார். அவர் குற்றமற்ற ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தார். தமது 33வது வயதில் தன் வாலிபத்தின் இரத்தத்தைச் சிந்த தன்னையே அர்ப்பணித்தார்.

மரச் சிலுவையில் வைத்து அவருடைய கைகளிலும், கால்களிலும் ஆணிகள் அடிக்கப்பட்டு, தன் இரத்தம் முழுவதையும் சிந்தினார். பாவத்தின் சம்பளம் மரணம். (ரோமர் 6:23). பாவம் செய்த நாம் மரிக்க வேண்டிய இடத்தில், நமக்குப் பதிலாக மரிப்பதற்கு, தன்னையே அர்ப்பணித்தார். நம்முடைய பாவங்கள், சாபங்கள், தோஷங்களை அவர் சிலுவை மரத்தில் சுமந்து தீர்த்தார். அவரால்தான் நம்முடைய பாவங்களை மன்னிக்க முடியும்! அவரால்தான் நம்முடைய சாப தோஷங்களை நீக்க முடியும்! அவர்தான் இந்த வானத்தையும், பூமியையும், உங்களையும் படைத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து!

இவர், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக, இஸ்ரேல் தேசத்திலுள்ள, ‘பெத்லகேம்’ என்கிற ஊரில் ஒரு மனிதனாக பிறந்தார். குற்றமில்லாத பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, மனிதர்களுக்கு அனேக நன்மைகளை செய்தார். வியாதியஸ்தர்களை குணமாக்கினார்! பிசாசு பிடித்தவர்களுக்கு விடுதலை கொடுத்தார்! ஜனங்களின் பாவ, சாபங்களை மாற்றி, அவர்களுக்கு சமாதானம் கொடுத்தார்!

இவர் மீது பொறாமை கொண்ட சில மதத் தலைவர்கள், அன்றைக்கு ஆட்சி செய்து கொண்டிருந்த ரோம அரசாங்க அதிகாரியிடம், ‘‘இவரை சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும்.’’ என்று வற்புறுத்தினார்கள். இவரோ விசாரனையின்போது, தனக்காகப் பேசாமல் அமைதியாக இருந்தார். அந்த ரோம அரசாங்க கவர்னர், குற்றமே செய்யாத இவரை சிலுவையில் அறைந்து கொல்ல ஒப்புக் கொடுத்தார்.

காரணம், முழு மனுக் குலத்திற்காகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் இரத்தம் சிந்தி மரிப்பதற்காகவே, ‘இயேசு கிறிஸ்து’ என்கிற கடவுள், இந்த பூமியில் ஒரு மனிதனாக அவதரித்தார். மனுக் குலத்தின் பாவ, சாபங்கள் நீங்குவதற்காக, தான் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருக்க வேண்டுமென்று இயேசு கிறிஸ்துவே சொல்லியிருந்தார்!

அந்த தேசத்தில் அந்தக் காலத்திலிருந்த வழக்கத்தின்படி, மலையில் குடைந்து உருவாக்கப்பட்ட ஒரு கல்லறையில் இயேசு கிறிஸ்துவின் உடலை அடக்கம் செய்தார்கள். இயேசு கிறிஸ்து, தான் சொன்னபடியே, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்!

உயிரோடு எழுந்த இயேசு கிறிஸ்து அனேகருக்கு தரிசனமானார். ‘‘மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் என்றார்.’’ (வெளி. 1:18). மரித்தும், சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறவர்தான், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து!        

‘‘இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.’’ (1 யோவான் 1:7).

இந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, உங்கள் உள்ளத்தில் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளும்போது, உங்கள் பாவத்தின் பாரம் நீங்கி, உள்ளத்தில் சமாதானம் உண்டாவதை நீங்கள் உணர முடியும்.அனைவருக்கும் ஈஸ்டர் தின  நல்வாழ்த்துக்கள் !

சகோ. மோகன் சி லாசரஸ்
இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் 
நாலுமாவடி