குலசை முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவிற்காக சிறப்பு மருத்துவ உதவி ஏற்பாடு - கலெக்டர் தகவல்
kulasai news
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் அருள் மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழாவை முன்னிட்டு சுகாதார துறையின் சார்பாக பக்தர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு சுகாதார துறையின் சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எல்லா இடங்களிலும் கொசு ஒழிப்பு புகைமருந்து காலை மற்றும் மாலை வேளைகளில் தினசரி அடிக்கப்படுகிறது.
மேல்நிலை தொட்டிகள் மூலமும், லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதில் குளோரின் அளவை பரிசோதனை செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடற்கரை பகுதி, பஸ் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீரை பருகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்ணவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாகம் இல்லாவிட்டாலும், முடிந்தவரை போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்லுங்கள். ஓஆர்எஸ் கரைசல், எலுமிச்சை தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை சிறிது உப்பு சேர்த்து உட்கொள்ளவும். முலாம்பழம், கஸ்தூரி முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, வெள்ளரி அல்லது உள்நாட்டில் கிடைக்கும் பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்.
உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை அணியவும். வெளிர் நிறங்களில் மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. உங்கள் தலையை மூடிக்கொள்ளுங்கள். சூரிய ஒளியில் நேரடியாக வெளிப்படும் போது குடை, தொப்பி, துண்டு மற்றும் பிற பாரம்பரிய தலையை மூடும்பொருட்களை பயன்படுத்தவும்.
தேநீர், காபி மற்றும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அல்லது அதிக அளவு சர்க்கரை கொண்ட பானங்கள் ஆகியவற்றைத் கூடுமானவரை தவிர்க்கவும். இவை உண்கையில் அதிக உடல் திரவத்தை இழக்க வழிவகுக்கும் அல்லது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தலாம். திறந்த வெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிக்கக் கூடாது. திறந்த வெளியில் ஈ மொய்க்கும் உணவுகளை உண்பதை தவிர்க்கவும். குப்பைகள் மற்றும் உணவுக் கழிவுகளை அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் போட்டு சுற்று புற சுகாதாரம் பேணவும் அறிவுறுத்தப்படுகிறது. நீண்ட நேரம் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் குழந்தைகளை உள்ளேயே இருக்க விடாதீர்கள். வாகனத்தின் உள்ளே வெப்பநிலை ஆபத்தானதாக இருக்கலாம்.
குலசேகரப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓஆர்எஸ் கரைசல் கொடுப்பதற்குத் தனியே இடம் அமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் கடற்கரையிலும் ஓஆர்எஸ் கரைசல் வழங்குவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உடற்சோர்வு, நீரிழப்பு ஏற்படின் அருகிலுள்ள மருத்துவ முகாம்களில் உள்ள ஓஆர்எஸ் கரைசலை பருகவும். இதர சிகிச்சை தேவைப்படுவோர் மருத்துவ முகாம்களுக்குச் சென்று சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.