குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா - பக்தர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை ஏற்பாடு

kulasai Mutharamman kovil

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா - பக்தர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை ஏற்பாடு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு சுகாதார துறையின் சார்பாக திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ குழுக்கள் மூலம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : 

குலசேகரப்பட்டினம் கோவில் அருகில், கடற்கரை அருகில் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் விடுதி ஆகிய இடங்களில் மருத்துவ குழு மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 24 மணிநேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழு அமைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குலசேகரப்பட்டினத்தின் எல்லா இடங்களிலும் கொசு ஒழிப்பு புகைமருந்து காலை மற்றும் மாலை வேளைகளில் தினசரி அடிக்கப்படுகிறது. மேல்நிலை தொட்டிகள் மூலமும், லாரிகள் மூலமும் விநியோகம் செய்யப்படும் குடிநீர் குளோரின் அளவை பரிசோதனை செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய சுகாதார ஆய்வாளர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டு பாதுகாக்கபட்ட குடிநீர் வழங்குவதை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவைகள்  கடற்கரை பகுதி, பஸ் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிற்படுத்தப்படடோர்  விடுதி ஆகிய இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீரை அருகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்ணவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பக்தர்கள் திறந்த வெளியில் மலம் மற்றும் சிறுநீர கழிக்க கூடாது. திறந்த வெளியில் ஈ மொய்க்கும் உணவுகள் உண்பதை தவிரக்கவும். குப்பைகள் மற்றும் உணவு கழிவுகளை அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் போட்டு சுற்றுப்புற சுகாதாரத்தை பேணவும் அறிவுறுத்தப்படுகிறது.

உடற்சோர்வு, நீரிழப்பு ஏற்படின் அருகிலுள்ள மருத்துவ முகாம்களில் உள்ள ஓஆர்எஸ் கரைசலை பருகவும் சிகிச்சை தேவைப்படுவோர் மருத்துவ முகாம்களுக்கு சென்று சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று ஆட்சியர் அறிக்கையில் கூறியுள்ளார்.