பக்தர்கள் வசதிக்காக கோவிலுக்கென்று சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் - குலசை பக்தர்கள் சார்பில் கோரிக்கை
Kulasai news
மைசூருக்கு அடுத்தபடியாக அதிகம் பக்தர்கள் கூடும் கோயிலாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் விளங்கி வருகிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு தக்க அவர்களுக்கான வசதிகளையும் அதிகப்படுத்தித்தான் ஆக வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில். குலசேகரபாண்டிய மன்னன் ஆண்ட பூமி, இயற்கை துறைமுகம் இருந்த பகுதி, அங்கிருந்து ஏற்றுமதி, இறக்குமதியெல்லாம் நடந்திருக்கிறது என்கிறது வரலாறு. அங்கு சுயம்புவாக உருவான ஞானமூர்த்தியும், முத்தாரம்மனும் சிவன், பார்வதி அம்சங்களாகும். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் விழாவை சிறப்பாக கொண்டிருக்கிறது. வேண்டியது கிடைக்கும், வேண்டாததை அகற்றும் வல்லமை கொண்டவள் முத்தாரம்மன். சக்தி வாய்ந்த இந்த தெய்வத்தை நினைத்து நேர்த்திகடன் செலுத்துவதில் பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு, அம்மனின் அருள்தான் காரணமாகும். கடற்கரையில் வீற்றிருக்கும் முத்தாரம்மனை காண கடல்கடந்தும் பக்தர்கள் வருகிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் குலசேகரன்பட்டினத்தை உள்ளடக்கிய திருச்செந்தூர் வட்டாரமே திணறித்தான் போகிறது. திருச்செந்தூர் - உவரி இடையிலானா சாலை குறிப்பிட்ட நாட்களுக்கு முடங்கி போவது வாடிக்கையாக உள்ளது. மேலும் முத்தாரம்மன் கோவிலில் உச்சபட்ச நிகழ்ச்சி என்பது மகிஷா சூரனை வதம் செய்வதாகும். அன்று அப்பகுதியில் போக்குவரத்தே ஸ்தம்பித்து போவது வாடிக்கை. அன்றைய தினம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது என்றாலும் பக்தர்கள் ஆங்காங்கே உள்ள தனியார் வெற்று நிலங்களில் வாகனங்களை நிறுத்தி தங்கும் நிலை இருந்து வருகிறது. அதாவது வரும் பக்தர்கள் அனைவரும் கோவில் அருகே தங்கி இருக்க முடியாத அளவில் இடம்வசதி போதிய அளவில் இல்லை என்பது முக்கியமான குறையாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்திற்கென்று பக்தர்கள் தங்க நிலம் தேவைப்படுகிறது. தற்போது வெற்று நிலங்களாக உள்ள தனியார் நிலங்கள் எப்போதும் வெற்று நிலங்களாகவே இருக்கும் என்று கருத முடியாது. ராக்கெட் ஏவுதளம், உடன்குடி அனல்மின்நிலையம், திருச்செந்தூர் - கன்னியாகுமரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலை என்று பிரபலமாகி கொண்டு போகும் அப்பகுதியில் தனியார் நிலங்கள் அப்படியே கிடக்க வாய்ப்பு இல்லை. எனவே இந்து சமய அறநிலையத்துறை அப்பகுதியில் உள்ள தனியார் நிலங்களை விலை கொடுத்து வாங்கி கோவிலுக்கு சொந்தமான நிலமாக ஆக்க வேண்டும். அதற்கான நிதியை பெற அறிவிப்பு வெளியிட்டால் பக்தர்கள், தொழிலதிபர்களின் பங்களிப்போடு அதனை வாக்க முடியும். சுற்றுவட்டாரத்தில் குறிப்பிட்ட ஏக்கரில் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் இருக்கிறது என்றால் அதற்குள் பக்தர்கள் வரும் வாகனத்தை நிறுத்திவைக்கலாம். பக்தர்கள் அங்கே தங்கி கொள்ளலாம். விரைவில் முடிவெடுக்க வேண்டிய காலம் இது. இதேநிலைதான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும். அங்கும் பக்தர்கள் தங்குவதற்காக கோவில் நிலம் தேவை.
எனவே இந்த கோரிக்கை தகவலை பக்தர்கள் என்கிற முறையிலும், கோடிக்கணக்கான பக்தர்கள் சார்பிலும் நடுநிலை.காமில் வெளியிடுகிறோம். சம்பந்தபட்ட இந்து சமய அறநிலையத்துறையும், பக்தர்களும் இணைந்து பேசி விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். தற்போது இந்த முயற்சி எடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் நிலத்தின் மதிப்பு ஏகபோகமாக அதிகரித்துவிடும். அப்போது வாங்குவோருக்கும் கஷ்டம், கொடுப்போருக்கும் கஷ்டமாக இருக்கும். எனவே இந்த யோசனையை ஏற்று, உடனே கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு, அருள்மிகு முத்தாரம்மன் அருள் கொடுக்க வேண்டும்.
நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள், 8056585872